Published : 31 May 2021 03:11 AM
Last Updated : 31 May 2021 03:11 AM

விதிமுறைகளை மீறி கரோனா தடுப்பூசி - தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை : மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி

விதிகளை மீறி கரோனா தடுப்பூசிசெலுத்தும் நட்சத்திர ஓட்டல்கள் மீதும், அவற்றுக்கு உதவி செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீதும்கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசிபோடும் பணி கடந்த ஜனவரி மாதம்தொடங்கியது. இதனிைடயே, நாட்டில் உள்ள பல நட்சத்திர ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து கரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக தகவல் வெளியானது. இதற்கான தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக பிரத்யேக 'பேக்கேஜ்களை' நட்சத்திர ஓட்டல்கள் அறிவித்துள்ளன. அதாவது, தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு சத்தான உணவுகளை வழங்கி ஓட்டல் அறையில் ஒரு நாள் தங்க வைத்தல்; அவர்களுக்கு இலவச வைஃபை இணைப்புகளை வழங்குதல் உள்ளிட்டவை அந்த பேக்கேஜில் அடங்கும். இதற்கு கணிசமான தொகை வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களின் இந்த செயல்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன்.

இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் நேற்று முன்தினம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கரோனா தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து சில நட்சத்திர ஓட்டல் கள் மக்களுக்கு செலுத்தி வரு வதாக தகவல் கிடைத்துள்ளது. இது தடுப்பூசி தொடர்பான மத்திய அரசின் விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானதாகும். எனவே, இந்த செயலில் ஈடுபடும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x