Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

ஜூன் 3-ல் கருணாநிதி பிறந்த நாளை - வீடுகளிலேயே எளிமையாக கொண்டாட வேண்டும் : திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை அவரவர் வீடுகளிலேயே எளிமையாக கொண்டாட வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜூன் 3 - நம் தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழித் தகுதியை பெற்றுத் தந்த கருணாநிதியின் பிறந்தநாள். திமுகவினருக்கு அதுசிறந்த நாள். இன்று அவர் நம்மிடையே இல்லை என்கிற ஏக்கம் ஒருபுறமிருந்தாலும், அவர் கட்டிக்காத்த திமுக இன்று தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தை ஆளும் வாய்ப்பினை பெற்றிருக்கிறது.

முதல்வர் பொறுப்பில் கருணாநிதி இல்லை என்றாலும், அவர்தான் ஆட்சி செய்கிறார் என்பதை, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என பதவியேற்பு உறுதிமொழி ஏற்ற நான், என் உள்ளத்தில் ஆழப்பதியவைத்துள்ளேன். கருணாநிதியின் பெயருக்கும் புகழுக்கும் அணிசேர்க்கும் வகையில், இந்தப் பேரிடர் காலத்தில் இணையிலாப் பணியாற்றி, மக்கள் நலன் போற்றிக் காத்திட வேண்டும் என்ற உறுதியுடன் ஒவ்வொரு நாளும் ஊழியம் செய்து வருகிறேன். அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் அனைவரும் மக்கள் நலன் காக்கும் பணியில் தங்களைஒப்படைத்துக் கொண்டு அரும்பணியாற்றுகின்றனர்.

மகத்தான வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு திமுக தொண்டரின் நெஞ்சிலும் இருக்கத்தானே செய்யும். கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம்நாள் எப்படி அமைய வேண்டும்என்பதற்கான திட்டங்கள் வைத்திருந்தேன். எல்லாவற்றையும் இந்தப்பேரிடர் காலம் தள்ளிவைத்திருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதுஒன்றே நம் முன் உள்ள தலையாய பணி. அதற்காக நம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கு சிறப்பு சேர்ப்பதாகும்.

ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் கருணாநிதி பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம். திமுகவினர் அவரவர் இல்லங்களில் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்திகொண்டாடுங்கள். ஏழை, எளியமக்களுக்கு அவர்கள் இருப்பிடம்சென்று உணவு உள்ளிட்ட உதவிகளை செய்யுங்கள். அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்று முகக் கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா பேரிடர் காலநெறிமுறைகளை சரியாக கடைபிடித்து, எவ்வகையிலும் கூட்டம் சேர்ந்திடாதவாறு கவனமாக செயலாற்றுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதே கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்கான செயல்திட்டமாக அமையட்டும்.

திமுக ஆட்சி அமைந்த முதல் ஆண்டில் கருணாநிதி பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட இயலவில்லையே என வருந்த வேண்டாம். 5 ஆண்டுகளும் திமுக ஆட்சிதான். அதை அடுத்து வரும் ஆண்டுகளும் திமுகவே ஆட்சி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் மனமுவந்து தீர்ப்பளிக்கும் நல்வாய்ப்பு அமைந்திடத்தான் போகிறது. எனவே, பேரிடர் கால நெறிமுறைகளை கடைப்பிடித்து கருணாநிதி பிறந்தநாளை அமைதியாக, எளிமையாக கொண்டாடுவோம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x