Published : 30 May 2021 03:12 AM
Last Updated : 30 May 2021 03:12 AM

மலைக் கிராமத்தில் சாராயம் காய்ச்சிய 7 பேர் கைது :

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே மலைக் கிராமத்தில் சாராயம் காய்ச்சிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கரோனா தொற்று இரண்டாம் அலை தீவிர பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மாநிலம் முழுக்க தளர்வற்ற முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதன் காரணமாக மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுபோன்றவர்களை இலக்கு வைத்தும், சொந்த பயன்பாட்டுக்காகவும் தருமபுரி மாவட்டத்தில் சிலர் ரகசியமாக சாராயம் காய்ச்ச முயன்று வருகின்றனர். அந்த வரிசையில் காவல்துறையின் அரூர் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களில் சாராயம் காய்ச்சும் பணி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அரூர் உட்கோட்ட போலீஸார் கலசபாடி, கோம்பூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களில் சோதனை மேற்கொண்டனர். இச் சோதனையின்போது, கலசபாடி மலை கிராமத்தில் பல இடங்களில் சாராயம் காய்ச்சும் பணி நடப்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே, சாராயம் காய்ச்ச தயார் செய்து வைக்கப்பட்டிருந்த ஊறல்களை அழித்த போலீஸார், காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சாராயத்தையும் கைப்பற்றி அழித்தனர்.

மேலும், இது தொடர்பாக கலசபாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், வேடன், விஜயகுமார், பரமசிவம், அண்ணாமலை, அஜித்குமார், முருகன் ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். வேறு பகுதிகளில் சாராயம் காய்ச்சும் பணி நடக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x