Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM

ஒடிசா மாநிலம் பாலசோருக்கு அருகே பலத்த சூறைக்காற்றுடன் - கரையைக் கடந்தது ‘யாஸ்’ புயல் : மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் படைமேற்கு வங்கத்திலும் கடும் பாதிப்பு

வங்கக் கடலில் உருவான ‘யாஸ்’ புயல், அதிதீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாலசோருக்கு அருகே நேற்று கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 130 முதல் 155 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. புயல்் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 17 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வலுவடைந்து புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு ‘யாஸ்’ என பெயரிடப் பட்டது. இந்த புயல் 3 நாட்களுக்கு முன்பு மேலும் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியது.

இது ஒடிசாவின் பாலசோர் பகுதியில் இருந்து 430 கி.மீ. தொலைவிலும் பாரதீப் பகுதியில் இருந்து 320 கி.மீ.தொலை விலும் நேற்று முன்தினம் மையம் கொண் டிருந்தது. பின்னர் புயலானது வடக்கு மற் றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வந்தது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில், வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் தம்ரா என்ற இடத்துக்கு கிழக்கே 60 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. பின்னர் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் வடக்கு ஒடிசா - மேற்குவங்கம் கடற்கரை இடையே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே பாலசோர் பகுதிக்கு அருகே புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 130 முதல் 155 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசியது. பாலசோர் பகுதியில் 2 முதல் 4 மீட்டர் உயரத்துக்கு ராட்சத கடல் அலைகள் எழும்பின. புயல் கரையைக் கடந்து முடிக்க 3 மணி நேரம் எடுத்துக் கொண்டது. ‘யாஸ்’ புயல் காரணமாக ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஒடிசா மட்டுமல்லாமல் மேற்குவங்க மாநிலத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஒடிசாவின் பல பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு பெயர்ந்து விழுந்துள்ளன.

புயல் காரணமாக ஒடிசாவில் 6 லட்சம் பேரும், மேற்கு வங்கத்தில் 11.5 லட்சம் பேரும் வெளியேற்றப்பட்டு, பாதுகாப் பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மும்பை, கொல்கத்தா, புவனேஸ்வர் இடையே விமானங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. பல்வேறு விமான நிலை யங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. துர்காபூர், ரூர்கேலா விமான நிலை யங்களும் மூடப்பட்டு உள்ளன.

புயல் கரையைக் கடந்த பின்னரும் ஒடிசா, மேற்கு வங்கத்தின் பல பகுதி களில் பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கடலோர கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது. சாலைகளில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்துள்ளதால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தினரும் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

ஒடிசாவில் மரம் விழுந்து ஒருவர் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக முழு தகவல்கள் வரவில்லை என மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் பாதிப்பு

இதனிடையே, மேற்கு வங்கத்தில் ஒரு கோடி மக்கள் புயலால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும் அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

புயலால் பாதித்த பகுதிகளை விரைந்து பார்வையிடப் போவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேலும் புயல் பாதித்த பகுதிகளில் போர்க் கால அடிப்படையில் பணிகளை மேற் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x