Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

பள்ளிகளில் பாலியல் புகாரை விசாரிக்க தனி குழு : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்

சென்னை கே.கே.நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இணையதள வகுப்புகளுக்கு விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி, துறை அதிகாரிகளுடன் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று ஆலோசனைநடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம்நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்,உச்சநீதிமன்ற உத்தரவின்படி, நுங்கம்பாக்கத்தில் உள்ளபள்ளிக் கல்வி இயக்குநரக வளாகத்தில் விசாகா கமிட்டி அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

இணைய வகுப்புகளுக்கு ஏற்கெனவே தமிழக அரசால் வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதை யாரும்முறையாக பின்பற்றவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. எனினும், வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு மீண்டும் அறிவுறுத்தப்படும்.

இதுதவிர, பள்ளிகளில் பாலியல் புகார்களை பதிவு செய்து விசாரிக்க தனிக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதில்,பெண் ஆசிரியர்கள் இருப்பார்கள். இந்தக் குழு அனைத்து பள்ளிகளிலும் உள்ளதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதே நேரம், இத்தகைய புகார்களின் உண்மைத் தன்மையை பரிசோதிப்பதும் அவசியம். ஏனென்றால், நல்ல ஆசிரியர்கள் மீது தேவையில்லாத புகார்கள் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

இதுபோன்ற சம்பவம் நடைபெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கே ஒருபாடம். இனிவரும் நாட்களில் நாங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம். இதுதொடர்பாக ஏற்கெனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளதாக பல முன்னாள் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் நேரடியாக வந்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிபிஎஸ்இ பள்ளியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால், மத்திய அரசுக்கு அதன் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. முதல்வரின் ஒப்புதல் கிடைத்த பிறகு, அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்துதெரிவிக்கப்படும். தேர்வு எழுத வரும் அனைத்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு நலன்களை கருத்தில் கொண்டுதான் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவை கூடி தீர்மானம் நிறைவேற்றிய பிறகு தகவல் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x