Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM

கோவை மாவட்டத்தில் 228 ஊராட்சிகளிலும் - ‘கரோனா தடுப்புக் குழு’ அமைப்பு :

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மாவட்ட நிர்வாகத்தினர், சுகாதாரத் துறையினருடன் இணைந்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதன்படி, 228 கிராம ஊராட்சிகளிலும் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்தவும், முன்னேற் பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவும், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர், மாவட்டகாவல் கண்காணிப்பாளரால் நியமிக்கப் பட்ட கிராம காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட, கிராம ஊராட்சி அளவிலான ‘கரோனா தொற்று தடுப்புக் குழு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து நோய் தடுப்புப் பணிகளை மேற்கொள்வர்.

இக்குழுவினர், ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ‘கரோனா தொற்று சிகிச்சைமையம்’ (பிஎல்சிசிசி) ஏற்படுத்த இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.தினமும் தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரியஅல்லது சிறிய கட்டிடத்தை தேர்வு செய்ய வேண்டும். வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்ட நோயாளிகளை, மேற்கண்ட சிகிச்சை மையத்தில் தங்க அறிவுறுத்த வேண்டும். அவ்வப்போது பொது சுகாதாரத் துறையின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இச்சிகிச்சை மையத்துக்கு வரும் நோயாளிகள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீட்டிலிருந்து கொண்டு வரலாம். மேலும், இப்பொருட்களை தனியார் பங்களிப்பு நிதியின் மூலமோ அல்லது கிராம ஊராட்சி பொது நிதியின் மூலமோ உரிய அனுமதி பெற்றும் வாங்கலாம்.

தீவிர கண்காணிப்பு

அடுத்த ஒரு வாரத்துக்கு ஊராட்சி யின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

வெளியாட்கள் ஊராட்சிகளில் நுழையாமலும், ஊராட்சியை சேர்ந்தவர்கள் தேவையின்றி வெளியே செல்லாத வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும்போது, ஊராட்சியின் பொது இடங்களான முகப்புப் பகுதி,கோயில், மைதானங்களில் கூட்டம் கூடாமல் தடுக்க வேண்டும். திருமணம், உயிரிழப்பு போன்ற நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை ஊராட்சி பிரதிநிதிகள் உறுதி செய்ய வேண்டும். கிராம ஊராட்சிப் பகுதிகளில் போதிய எண்ணிக்கையில் காவல்துறையினரை பணியமர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x