Published : 23 May 2021 05:50 AM
Last Updated : 23 May 2021 05:50 AM

கரோனா இல்லாத 4,000 பேருக்கு தொற்று இருப்பதாக பதிவேற்றம் - தொழில்நுட்ப கோளாறால் தவறு நடந்ததாக தனியார் ஆய்வகம் விளக்கம் :

தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று இருப்பதாக பதிவேற்றம் செய்யப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என்று தனியார் ஆய்வகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 69 அரசு மருத்துவமனைகள், 198 தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை (ஆர்டிபிசிஆர்) செய்யப்படுகிறது. இந்த நிலையில், ‘மெட் ஆல்’ என்ற தனியார் ஆய்வகம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை, தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இணையதளத்தில் தவறாக பதிவேற்றம் செய்தது. தமிழகத்தில் கரோனா இல்லாத 4 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதாக தவறான விவரங்களையும் பதிவேற்றம் செய்தது.

இதுபற்றி தெரியவந்ததும் ஆய்வக நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடந்த 21-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். கரோனா பரிசோதனை செய்ய ஆய்வகத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்தார்.

இந்நிலையில் ‘மெட் ஆல்’ ஆய்வகம் விளக்கம் அளித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மெட் ஆல் ஆய்வகம் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறது. எங்கள்பரிசோதனைகள், முடிவுகளின் துல்லியத்தில் எவ்வித குறைபாடு,தவறும் கண்டறியப்படவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐசிஎம்ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் சிலதவறுகள் நடந்துள்ளன. இதற்குவருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இது முழுக்க தொழில்நுட்ப ரீதியில் நடந்த தவறுதான். மெட் ஆல் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகளில் ஏற்பட்ட தவறு அல்ல.

கரோனா பரவலை தடுக்க தமிழகஅரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு தொடர்ந்து பங்களிக்கவே எங்கள்ஆய்வகம் விரும்புகிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற தொழில்நுட்ப தவறுகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஏற்கெனவே நடந்த சில தவறுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x