Published : 21 May 2021 03:12 AM
Last Updated : 21 May 2021 03:12 AM

கரோனாவை வெல்ல தடுப்பூசி அவசியம் - தொடர் நோய்களால் பாதிக்கப்பட்டோர் கூடுதல் விழிப்புடன் இருக்கவும் : புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

புதுச்சேரி

தொடர் நோய்களால் பாதிக்கப் பட்டோர் தவறாமல் மருந்து உட்கொண்டு. நோயை கட்டுக்குள்வைத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறியிருப்பதாவது:

கரோனா நோயின் இரண்டாவது அலையை நமது நாடு எதிர்த்துப் போராடி வரும் வேளையில், தொடர் நோய்களான ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், இதயநோய், சிறுநீரக நோய் மற்றும்நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் தவறாமல் மருந்தை உட்கொண்டு நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

இதய ரத்தக் குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் இதய ரத்தக் கோளாறுக்கு ஸ்டன்ட் (angioplasty) வைத்து உள்ளவர்கள் தவறாமல் ‘ஆஸ்பிரின்’ மற்றும் ரத்தம் உறையாமல் இருப்பதற்கான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவறாமல் தாங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் இன்சுலின் ஊசி மற்றும் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் கருப்பு பூஞ்சை (mucor mycosis) போன்ற உயிர் கொல்லி நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

பொதுமக்கள் இதனை உணர்ந்து கரோனா தடுப்பூசியை உடனே போட்டுக்கொண்டு தங்களையும் தங்கள் பாசத்துக்கு உள்ளவர்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தேவை இல்லா பயணங்களை தவிர்க்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x