Published : 20 May 2021 03:11 AM
Last Updated : 20 May 2021 03:11 AM

கோயில்களின் சொத்து ஆவணங்களை - இணையத்தில் பதிவேற்ற வேண்டும் : அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவு

சென்னை

கோயில்கள் பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணைய பதிவேற்றம் குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் பெ.ரமணசரஸ்வதி, ந.திருமகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோயில் நிர்வாகம், அலுவலர்கள் பற்றிய விவரங்கள், திருப்பணி,விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும். கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். கோயில்நிலங்கள், கட்டிடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினி வழியில் பார்வையிடும் வகையில், புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

கோயில்களின் பெயரில் உள்ளஅசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கோயில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

நியாயமான வாடகை வசூலிப்பதுடன் கோயில் வருவாயை பெருக்கும் வகையில் நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x