Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM

கரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் - பொது இடங்களில் நீராவி பிடிக்க வேண்டாம் : சுகாதாரத் துறை அமைச்சர் வேண்டுகோள்

பொது இடங்களில் நீராவி பிடிக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் 100 படுக்கை வசதி கொண்ட கரோனா பராமரிப்பு மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது:

சுகாதாரத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்துஈஞ்சம்பாக்கத்தில் 33 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள், விருகம்பாக்கத்தில் 40 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது சற்று மனநிறைவை தருகிறது. சென்னையில் மக்கள் யாரும் ஆக்சிஜன் வசதியை தேடி அலையக் கூடாது என்பதற்காக, முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 995 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 595 ஆக்சிஜன் செறிவூட்டிகள் (கான்சன்ட்ரேட்டர்) விரைவில் வர உள்ளன.

சென்னையில் கடந்த ஒருவாரமாக 11,800 களப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்முறையாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமையில் இருப்பவர்களை, நேரடியாக அவர்களது வீட்டுக்கே சென்று, மருத்துவ ஆலோசனை வழங்கி சிகிச்சை அளிக்க15 மண்டலங்களுக்கு 300 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவசதி இல்லாதவர்கள், பராமரிப்பு மையங்களில் தங்கி சிகிச்சை பெறலாம்.

கரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு. ‘100 சதவீதம்அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டோம்’ என்ற நிலையை இன்னும் 5 மாதத்துக்குள் தமிழகத்தில் உருவாக்க வேண்டும்.

பொது இடத்தில் நீராவி பிடித்தால், கரோனா தொற்று பாதித்தஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு சுலபமாக பரவி, உடனடியாக நுரையீரல் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, பொது இடங்களில் நீராவி பிடிக்கவேண்டாம். நாமாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், ஆயிரம்விளக்கு எம்எல்ஏ எழிலன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x