Published : 18 May 2021 03:12 AM
Last Updated : 18 May 2021 03:12 AM

கரோனா பாதிப்பால் நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு :

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்த நிதிஷ் வீரா (48) கரோனா தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார்.

கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி மேற்கொண்ட இவரும், நடிகர் விஜய்சேதுபதியும் ஒரே காலகட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தமிழில் வல்லரசு திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நடித்துள்ள லாபம், சாணி காயிதம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன.

துணை மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நிதிஷ் வீரா, நாயகனாக நடித்த ‘பெல்’ திரைப்படமும் முழு பணிகளும் நிறைவுபெற்று, ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. பார்த்திபன், புஷ்பவனம் கந்தசாமியுடன் இணைந்து வெப் சீரீஸிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிதிஷ் வீரா நேற்று அதிகாலை உயிரிழந்தார். மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த இவரது குடும்பத்தினரும், சென்னையில் வசித்து வருகின்றனர். அவருக்கு மனைவி நந்தினி, மகள்கள் யோஷிதா, வஷிதா உள்ளனர். நிதிஷ் வீராவின் உடல் நேற்று மாலை மதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

இயக்குநர் மனைவி உயிரிழப்பு

இதேபோல, திரைப்பட இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா(38) கரோனா தொற்றால் உயிரிழந்தார். ராஜா ராணி, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்த அருண்ராஜா காமராஜா, தெறி, காக்கிசட்டை, கபாலி, காலா உள்ளிட்ட படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். 2018-ல் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ திரைப்படத்தை இயக்கினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், அருண்ராஜாவின் மனைவி சிந்துஜா சில தினங்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x