Published : 17 May 2021 03:13 AM
Last Updated : 17 May 2021 03:13 AM

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக 13 எம்எல்ஏக்களுடன் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக் குழு :

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனாபரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சித்தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த 13-ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டப்பேரவைக் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கலாம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனடிப்படையில், அனைத்து சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களது பரிந்துரையின் அடிப்படையில் முதல்வர் தலைமையில் பின்வரும் சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது.

குழு உறுப்பினர்களாக திமுகவைச் சேர்ந்த மருத்துவர் நா.எழிலன், அதிமுகவின் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், இந்திய தேசிய காங்கிரஸ் ஏ.எம்.முனிரத்தினம், பாமக ஜி.கே.மணி, பாஜக நயினார் நாகேந்திரன், மதிமுக தி.சதன் திருமலைக்குமார், விசிக எஸ்.எஸ்.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வி.பி.நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் தி.ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இரா.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.வேல்முருகன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளுக்காக இக்குழு அவ்வப்போது கூடி விவாதிக்கும். இக்குழுவுக்கு பொதுத் துறை செயலர், உறுப்பினர் செயலராக செயல்படுவார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

புதிதாக 33,181 பேருக்கு கரோனா

தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று புதிதாக 33,181 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 19,008 பேர்,பெண்கள் 14,173 பேர். அதிகபட்சமாக சென்னையில் 6,247 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 98 ஆயிரத்து 216-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 47,330 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,19,342பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேபோல, அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 311 பேர் உயிரிழந்தனர். இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 670-ஆகஉயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 5 ஆயிரத்து 764 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x