Published : 15 May 2021 03:12 am

Updated : 15 May 2021 03:12 am

 

Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ - ‘ஒன்றிணைவோம் வா' திட்டம் மீண்டும் தொடக்கம் : திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை

‘ஒன்றிணைவோம் வா' திட்டத்தை மீண்டும் தொடங்கி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:


தமிழக மக்கள் அளித்த தெளிவான தீர்ப்பினால் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த வெற்றி மகிழ்ச்சிக்குரியது என்றாலும், கரோனா 2-வது அலையால் கொண்டாட்டத்துக்கு உரியதாக அமையவில்லை. கரோனாவால் பிற மாநிலங்களைப் போலவே தமிழகமும் பேரிடரை எதிர்கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் கரோனா பரவல்எண்ணிக்கை உயர்வதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் பெரும் கவலையை அளிக்கிறது. அதனால், ஆட்சிப் பொறுப்பேற்கும் முன்பாகவே அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என் சிந்தை முழுவதும் இந்த எண்ணமே நெற்றிச் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது.

அரசின் போர்க்கால நடவடிக்கை

மே 7-ம் தேதி அமைந்த திமுக அரசு, கரோனா பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும், உயரதிகாரிகளும், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவத் துறையினரும் மக்கள் நலன் காப்பதில் அயராமலும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி வரு கின்றனர்.

தமிழகத்துக்கு தினமும் 500மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டிருந்தேன். பிரதமர் விரைந்து அனுப்பிய பதிலில், உடனடியாக 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழகத்துக்கு தருகிறோம் என உறுதி அளித்தார். இது நம் தேவைக்கு ஏற்ப முழுமையான அளவு இல்லையெனினும், மாநில அரசின் கோரிக்கைக்கு உடனடியாக செவிமடுத்த பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தேவைப்படும் அளவிலான ஆக்சிஜனையும் விரைந்து அனுப்ப ஆவன செய்வார் என நம்புகிறேன்.

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், துறைசார்ந்த உயரதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர். தனியார் அமைப்புகளும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கி உதவுகின்றன. டிவிஎஸ் மோட்டார் - சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் சீனிவாசன் சர்வீசஸ் அறக்கட்டளை ரூ.18 கோடிமதிப்பிலான 1,600 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.

உதவிக்கரம் நீட்டுவதில் திமுகதொண்டர்கள் எப்போதும் முன்களவீரர்களாக நிற்பவர்கள். கரோனா முதல் அலையின்போது மக்களுக்குஉதவ திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா' என்ற செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.மருத்துவ முகாம்கள், முகக் கவசம் - சானிடைசர் வழங்குதல், ஏழைகளுக்கு உணவு வழங்குதல், வீடு தேடிச் சென்று உதவுதல் என்று மாவட்டச் செயலாளர் முதல் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரும் இப்பணியில் ஈடுபட்டனர்

ஆட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுடன் திமுக சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தை மீண்டும் தொடங்கி, மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுகவினரை கேட்டுக் கொள்கிறேன். திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் அனைவரும் இந்தப் பேரிடர் நேரத்தில் மக்களின் அடிப்படை அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். திமுக எம்எல்ஏக்கள், தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது. அனைத்துக் கட்சிஎம்எல்ஏக்களிடமும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளேன்.

களப்பணியாற்றுவோம். கண்ணீரைத் தடுப்போம். ஒன்றிணைவோம் வா... பேரிடர் காலத்தை வென்றிடுவோம் வா!

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x