Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

போக்குவரத்து ஊழியர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி

போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் சென்னை பல்லவன் இல்லம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.படம்: க.பரத்

சென்னை

போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் சென்னை மாநகரபோக்குவரத்து கழக தலைமையகத்தில் நேற்று நடந்தது. இதில், துறை செயலர் சி.சமயமூர்த்தி, அனைத்து போக்குவரத்து கழகங்களின் நிர்வாக இயக்குநர்கள், இயக்க ஊர்திகள் இயக்குநர், தமிழ்நாடு அரசுபோக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவனம், சாலை போக்குவரத்து நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:

நகரப் பேருந்துகளில் பெண்கள்இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு, அனைத்து போக்குவரத்து கழகங்களில் உள்ள 6,628 நகர்ப்புற பேருந்துகளிலும் முதல்வர் அறிவித்த அடுத்த நாளே(8-ம் தேதி) நடைமுறைப்படுத்தப்பட்டது. சென்னையில் தற்போது1,400 சாதாரண கட்டண பேருந்துகளில் இலவச பயணத்துக்குபெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு, மேலும் பல வழித்தடங்களுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும். திருநங்கையரும் பயன்பெறும் வகையில் முதல்வருடன் கலந்து பேசி ஆவன செய்யப்படும்.

பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசின் ‘நிர்பயா’ திட்டம் மூலம் அனைத்து பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், மக்கள் தங்கள் கைபேசி மூலம் பேருந்து வழித்தடங்களை எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலான ‘சலோ ஆப்’ செயலியை விரைந்து செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள போக்குவரத்து கழக பணியாளர்களின் முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘நாட்டின் சில இடங்களில் பேருந்திலேயே ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இவ்வாறு செயல்படுத்த முதல்வரிடம் கலந்துபேசி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை தயாராக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x