Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு - முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து :

உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்: உயிர்காக்கும் மருத்துவப் பணியில் முக்கிய கடைமையாற்றும் செவிலியர்களின் சேவையை நினைவுகூரும் செவிலியர் தினத்தில் அவர்தம் அரும்பெரும் சேவைகளை பாராட்டி போற்றி வாழ்த்துவோம். கரோனா தடுப்பு பணியில் வெள்ளுடை போர் வீரர்களாக மருத்துவமனைகளில் வலம் வந்து மக்களுக்கு பலம் சேர்க்கின்றனர். அவர்களை இந்நேரத்தில் நன்றி உணர்வோடு பாராட்டுவோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரை சிறப்பித்து, செவிலியர் அனைவரின் பணியையும் போற்றும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கரோனா பேரிடர் காலமும் போர்க்களத்துக்கு இணையானதுதான், இதில் முன்கள வீரர்களாக கடமையாற்றும் இருபால் செவிலியர்களுக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: எதையும் தாங்கும் பொறுமையும், யாவரையும் புரிந்து கொள்ளும் தன்மையும் கொண்டு, இரவு பகல் பாராது தன்னை வருத்தி பிறரைக் காக்கும் தன்னலமற்ற செவிலியர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: உலக மக்களின் உயிர்காக்க போராடும் செவிலியர்களின் சேவைகளுக்கு இவ்வுலகில் ஈடேதுமில்லை. செவிலியர்களின் அர்ப்பணிப்புக்கு தலைவணங்கி, அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் நலமுடன் வாழ மனதார வாழ்த்துவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலர் இரா.முத்தரசன்: மருத்துவமனையில் உள் நோயாளர்களாக இருந்தவர்கள் செவிலியர்களின் தன்னலமற்ற சேவையின்உயர் பண்பை உணர்ந்திருப்பார்கள். மானுடம் போற்றும் மருத்துவ சேவையில் உள்ள செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் : நெருக்கடியான சூழலில், நோயாளிகளிடம் தாயன்பு காட்டி இன்முகத்தோடு சேவையாற்றி வரும் செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த செவிலியர் தின வாழ்த்துகள்.

அமமுக பொதுச்செயலர் டிடிவி.தினகரன்: மருத்துவத் துறையில் மகத்தான பணியாற்றும் செவிலியர்கள் அனைவருககும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள், செவிலியர்கள் மருத்துவர்கள் உட்பட முன்களப் பணியாளர்கள் திடீரென உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பம் நிர்கதியாவதை தடுக்க நிதி தொகுப்பை உருவாக்க வேண்டும்.

காணொலியில் உரையாடிய முதல்வர்

காணொலி வாயிலாக செவிலியர்களுடன் உரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின், `கருணையின் வடிவம்' என்று செவிலியரை கூறலாம். உங்கள் சேவைக்கு அரசு காட்டும் நன்றியின் அடையாளமாக, இன்று நிதியை அறிவித்துள்ளேன். உயிரைப் பற்றி கவலைப்படாமல் செயல்படும் செவிலியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்" என்றார். மேலும், செவிலியர்கள் பணி நேரம், குடும்பத்தினருடன் செலவிடும் நேரம், அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் குறித்தெல்லாம் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x