Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட 223 பேர் எம்எல்ஏக்களாக பதவியேற்பு - பேரவைத் தலைவராக மு.அப்பாவு போட்டியின்றி தேர்வு : துணைத் தலைவராகிறார் கு.பிச்சாண்டி கரோனா தொற்று காரணமாக 10 எம்எல்ஏக்கள் பதவியேற்க வரவில்லை

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி உள்ளிட்ட 223 பேர் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர். கரோனா தொற்று காரணமாக அமைச்சர்கள் உட்பட 10 எம்எல்ஏக்கள் பதவியேற்க வரவில்லை.

இந்நிலையில் பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் இன்று நடக்கிறது. பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோரைத் தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட கு.பிச்சாண்டி, கிண்டி ஆளுநர் மாளிகை யில் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று காலை தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.59 மணிக்கு பேரவைக்குள் வந்தார். அவரை அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் மேஜையைத் தட்டி வர வேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் பழனி சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் களும் முதல்வருக்கு வணக்கம் தெரிவித் தனர். 10 மணிக்கு அவை தொடங்கியது.

எம்எல்ஏக்களுக்கு பேரவையின் தற் காலிக தலைவர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர் களின் பெயர்களை பேரவை செயலர் கி.சீனிவாசன் வாசிக்க, ஒவ்வொருவராக வந்து உறுதிமொழியை வாசித்து எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டனர்.

முதலாவதாக காலை 10.06 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் எம்எல்ஏவாக பதவி யேற்றார். அவரைத் தொடர்ந்து துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, க.பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்றனர்.

பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பழனி சாமி, சட்டப்பேரவையின் பாமக குழுத் தலைவர் ஜி.கே.மணி, பாஜக குழுத் தலை வர் நயினார் நாகேந்திரன், சட்டப்பேர வைத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள மு.அப்பாவு, சட்டப் பேரவை முன்னாள் தலைவர் ப.தனபால், முன்னாள் துணைத் தலைவர் பொள் ளாச்சி ஜெயராமன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் கள் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவி யேற்றனர். அதைத் தொடர்ந்து, தமிழ் எழுத்து அகர வரிசைப்படி எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.

முன்னதாக பேரவை முன்னவராக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அரசு கொறடாவாக திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ.வான கோவி செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

பதவியேற்காத 10 பேர்

மொத்தம் உள்ள 234 எம்எல்ஏக்களில், பேரவை தற்காலிகத் தலைவர் கு.பிச் சாண்டி நேற்று முன்தினம் ஆளுநர் முன் னிலையில் பதவியேற்றார். மற்ற 233 பேரில் 223 பேர் நேற்று பதவியேற்றனர். கரோனா தொற்று, உடல்நிலை பாதிப்பு காரணமாக சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந் தன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், திமுக எம்எல்ஏக்கள் வரலட்சுமி (செங்கல்பட்டு), ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தியூர்), எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்), சி.சண்மு கையா (ஓட்டப்பிடாரம்), அதிமுக எம்எல்ஏக்கள் ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்த நாடு), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), கடம்பூர் ராஜு (கோவில்பட்டி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய 10 பேர் பதவியேற்கவில்லை.

பேரவையில் முழக்கம்

பதவியேற்பு தொடங்கும் முன்பு பேசிய பேரவை தற்காலிக தலைவர் கு.பிச் சாண்டி, “பதவியேற்கும் உறுப்பினர்கள் உறுதிமொழி படிவத்தில் உள்ள வாசகங் களை கூட்டாமல், குறைக்காமல் வாசிக்க வேண்டும். உளமார அல்லது கடவுளறிய என்று கூறி உறுதிமொழி ஏற்கலாம். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்கலாம்’’ என்றார்.

முதல்வர், அமைச்சர்கள், திமுக, பாமக, விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ‘உளமார’ என்றும் அதிமுக, பாஜக உறுப்பினர்கள் ‘கடவுளறிய’ என்றும் உறுதிமொழி ஏற்றனர். காங்கிரஸ் உறுப் பினர்களில் சிலர் ‘கடவுளறிய’ என்றும், பலர் ‘உளமார’ என்றும் உறுதிமொழி ஏற் றனர். உதயசூரியன் சின்னத்தில் வென்ற மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் ‘கடவுளறிய’ என்றும், இரட்டை இலை சின்னத்தில் வென்ற புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ‘உளமார’ என்றும் உறுதிமொழியேற்றனர்.

சில உறுப்பினர்கள் உறுதிமொழி வாசித்து முடித்ததும் சில முழக்கங்களை எழுப்பினர். திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வென்ற கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் (திருச்செங் கோடு), ‘‘தீரன் சின்னமலையை வணங்கு கிறேன்’’ என்றார். பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), ‘‘தமிழ் வளர்க, வந்தே மாதரம்’’ என்றார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வென்ற திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக எம்எல்ஏவாக பதவி யேற்றதால், அமைச்சர்கள், திமுக உறுப் பினர்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, பேரவைக் கூட்டம் தொடங் கும் முன்பு பேரவை தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டியை அவரது அறையில் சந் தித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட் டோர் வாழ்த்து தெரிவித்தனர். பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினை பேரவை செயலர் கி.சீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

ஸ்டாலினுக்கு பாமக வாழ்த்து

பேரவையில் பதவியேற்ற பாமக உறுப் பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்க டேசன், சிவக்குமார், இரா.அருள், எஸ்.சதா சிவம் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை, கலைவாணர் அரங்கில் உள்ள முதல்வர் அறையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் எம்எல்ஏக்கள் பதவி யேற்பு முடிந்ததும் சட்டப்பேரவை நிகழ்வு கள் நிறைவடைவதாக அறிவித்த பேரவை தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி, “12-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு சட்டப் பேரவை கூடும். அப்போது சட்டப்பேர வைத் தலைவர், துணைத் தலைவருக் கான தேர்தல் நடைபெறும்’’ என்று அறிவித்தார்.

இதையடுத்து பேரவைத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவான மு.அப்பாவு, பேர வைச் செயலாளர் கி.சீனிவாசனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் உடனிருந்தனர். அதுபோல பேரவை துணைத் தலைவர் பதவிக்கு கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏவான கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த நிலையில் வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.

பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதும், அவரை முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து பேரவைத் தலைவருக்கான இருக்கையில் அமர வைப்பார்கள். பின்னர், பேரவைத் தலைவரை வாழ்த்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் பேசுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x