Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

எதிர்கால பயணத்தை திட்டமிட - மனதில் உள்ளதை மின்னஞ்சலில் அனுப்புங்கள் : தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்

எதிர்கால பயணத்தை திட்டமிடுவோம். உங்கள் மனதில் உள்ளதைமின்னஞ்சலில் எனக்கு அனுப்புங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மக்கள் நீதி மய்யம் அமைக்கப்பட்டது, அரசியலை வியாபாரமாக்கியவர்களுக்கு இன்னொரு கட்சியாக அல்ல. சீரழிந்துள்ள அரசியலில் ஒதுக்கப்பட்டு புக முடியாமல் இருக்கும் வர்க்கங்கள், இளைஞர்கள், மகளிருக்காக தொடங்கப்பட்டது. எனவே அரசியலை வியாபாரமாகப் பார்க்காமல் கடமையாக பார்ப்பவர்கள் மட்டுமே இக்கட்சியில் தங்கி செழிக்க முடியும்.

மநீமவின் இந்த நிலை வெற்றி எனும் பட்டியலில் சேராது. எனினும்அந்தப் பாதையில் நாம் பயணிக்கிறோம் என்பது உறுதி.

நான் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். என் சொந்த சம்பாத்தியத்தில் செலவு செய்த அந்தத் தொகை எனக்கு பெரிது. ஆனால், நம்முடன் களம் கண்ட போட்டியாளர்கள் செலவை ஏணி வைத்தால்கூட அது எட்டாது. அப்படி இருந்தும் மும்முனைப் போட்டிஇருந்த தொகுதியில் 33 சதவீதமக்கள் நம்மை மதித்து வாக்களித்துள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகள் வாங்காத மக்கள் நீதி மய்யம், 33 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது என்பதை நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ள முடியும்.

என் தலைவன் இருக்கின்றான். அவன் எங்களை வழிநடத்தியே தீருவான் என்று நம்பிக்கை கொள்ளும் நம்மவர் கூட்டம் இருக்கும் வரை எந்த சூழ்ச்சியும் நம்மை வீழ்த்தமுடியாது. கள ஆய்வுகளைச் செய்து தொண்டர்கள் செய்திகளை எனக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறார்கள். அந்த ஆய்வு இல்லாமல் களை எடுப்பதும் உசிதமல்ல.

உங்களை எல்லாம் நேரில் சந்திக்கத் துடிக்கிறேன். ஆனால், இப்போது பொது ஊரடங்கு இருப்பதால் அது சாத்தியம் அல்ல.

எனவே, மக்கள் சங்கடங்கள் குறையட்டும், ஓயட்டும். மீண்டும் நாம் சந்திப்போம், சிந்திப்போம், கலந்துரையாடுவோம், எதிர்கால பயணத்தை திட்டமிடுவோம். அதற்குள் உங்கள் மனதில் உள்ளதைஎனக்கு மின்னஞ்சல் (email) செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவருடைய சிந்தனையும் எனக்கு முக்கியமானது, கட்சிக்கு மகத்தானது. எனவே, தவறாது உங்கள் சிந்தனைகளை எழுத்தில் அனுப்புங்கள். இன்றை நம் வசப்படுத்துவோம், நாளை நமதாகும்.இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x