Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார் :

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா, மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. நடிப்பின் மீதான காதலால் சென்னை வந்தவர் பசும்பொன் பைன் ஆர்ட்ஸ் நாடக கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்தார். அப்போது சிவாஜி, முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களுடன் ஏற்பட்ட நட்பால் நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இயக்குநர் பாண்டியராஜனின் ‘ஆண் பாவம்’ படத்தின் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்பு அமைந்தது.

அதன்பின், ‘மகா பிரபு’, ‘வெற்றிக்கொடி கட்டு’, ‘சாமி’, ‘திருப்பாச்சி’, ‘அன்பே சிவம்’, ‘கிரீடம்’, ‘இம்சை அரசன் 23-ம்புலிகேசி’, ‘அறை எண் 302-ல்கடவுள்’, ‘படிக்காதவன்’, ‘தோரணை’, ‘கந்தசாமி’, ‘தமிழ்ப் படம்’, ‘கிரி’, ‘பாபநாசம்’, ‘மிருதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த சில படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நெல்லை சிவா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வந்தார்.

நெல்லைத் தமிழில் பேசுவதையே தனி பாணியாகக் கொண்டிருந்தார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்களின் அணியில் இணைந்து நடித்தர்.

‘கண்ணுக்கு கண்ணாக’ படத்தில் வடிவேலுவும், நெல்லை சிவாவும் இணைந்து நடித்த ‘கிணத்தக் காணோம்’ காமெடி இவருக்கு மிகப் பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊரான பணகுடிக்கு சென்ற சிவா, நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

அவரது இறுதிச் சடங்கு இன்று நண்பகலில் பணகுடியில் நடக்கிறது. நெல்லை சிவா மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x