Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

ஆசிரியரிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் மோசடி : பொதுமக்களுக்கு தூத்துக்குடி எஸ்பி அறிவுறுத்தல்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையைச் சேர்ந்தவர் ஆபிரகாம் ஆனந்தகுமார் (43). இவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 25.04.2021 அன்று தனது செல்போனில் இருந்து 'போன் பே' மூலமாக ரூ.1,999-க்கு ரீசார்ஜ் செய்துள்ளார். இதையடுத்து அவரது வங்கி கணக்கிலிருந்து அந்த பணம் எடுக்கப்பட்டது. ஆனால் செல்போனுக்கு ரீசார்ஜ் ஆகவில்லை.

எனவே, பணம் போய்விட்டதே என்ற பதற்றத்தில் ஆபிரகாம் ஆனந்தகுமார் இணையதளத்தில் 'போன் பே' என்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை தேடும்போது, அசல் 'போன் பே' என்று நினைத்து தவறுதலாக, அதில் வந்த போலியான வாடிக்கையாளர் சேவை மையத்தை தேர்வுசெய்து, அதில்கொடுக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு தன்னுடைய பணம் போய்விட்டது, ஆனால் ரீசார்ஜ் ஆகவில்லையென கூறியுள்ளார்.

எதிர் தரப்பில் பேசிய நபர், ஆபிரகாம் ஆனந்தகுமாரிடம் அனைத்து வங்கி கணக்கு விவரங்களையும் பெற்றுக்கொண்டு, உங்கள் செல்போனுக்கு ஒரு ஓடிபி வரும் என்றும், அது வந்த உடன் சொல்லுங்கள் என்றும் கூற, இவர் அந்த ஓடிபி எண்ணை கூறியுள்ளார். உடனே இவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.49,578 எடுக்கப்பட்டுவிட்டது. இதை அறிந்த ஆபிரகாம் ஆனந்த குமார் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார்.

எஸ்பி உத்தரவின் பேரில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் விசாரணை நடத்தினார்.

வாடிக்கையாளர் சேவை மையம் என்ற பெயரில் ஆபிரகாம் ஆனந்தகுமாரிடம் பேசிய நபர், பணத்தை ஒரு நிறுவனத்தின் மூலம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சைபர் குற்றப்பிரிவு போலீஸார் அந்த நிறுவனத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மோசடியாக ஆபிரகாம் ஆனந்தகுமார் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க பயன்படுத்திய போலியான வங்கி கணக்கை முடக்கம் செய்து, பணம் ரூ.49,578-ஐ உடனடியாக அவரது வங்கி கணக்குக்கே திருப்பியனுப்பிவிட்டனர்.

ஏமாற வேண்டாம்

இதுகுறித்து எஸ்பி கூறும்போது, “ வங்கி அதிகாரிகள் பேசுவதாகவோ, கடன் தருவதாக கூறியோ, செல்போன் டவர் அமைத்து தருவதாகவோ, பரிசுப்பொருள் அனுப்புவதாக கூறியோ,பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை குறைந்த விலையில் தருவதாக கூறியோ, வேலை வாய்ப்பு தருவதாக கூறியோ வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் எண்ணைக் கேட்டால் எக்காரணம் கொண்டும் யாரிடமும் கொடுக்கக்கூடாது. சைபர் குற்றங்கள் மூலம் வங்கி கணக்கில் மோசடிசெய்யப்பட்டால் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும்'ஹலோ போலீஸ்' 9514144100 என்றஎண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்” என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x