Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

10 அமைச்சகங்களின் பெயர்கள் மாற்றம் ஏன்? : மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை

புதிதாக அமைக்கப்பட்டுள்ள திமுக அமைச்சரவையில் 10 அமைச்சகங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில்மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், இலக்குகள், அரசின்லட்சியங்கள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின்பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் நீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம்‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்ற துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும்.

வேளாண்மைத் துறை அமைச்சகம் ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. உழவர் நலன்களையும் பேணிக் காப்பது என்ற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.

சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று மாற்றப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளை, கட்டமைப்புகளை இந்தஅமைச்சகம் செயல்படுத்தும்.

மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பதுஎன்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.

மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்றும், தொழிலாளர் நலத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்றும் மாற்றப்படுகிறது.

செய்தி - மக்கள் தொடர்புத் துறை‘செய்தித் துறை’யாக உருமாற்றம்அடைகிறது. செய்தி என்பதிலேயேஅத்துறையின் செயல்பாடான மக்கள் தொடர்பும் அடங்கியிருக்கிறது.

சமூக நலத்துறை ‘சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை’ என்றும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ‘மனிதவள மேலாண்மைத் துறை’ என்றும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் துறை, ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன்’ என்றும் பெயர் மாற்றம் அடைகிறது.

இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப்பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x