Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM

மேற்குவங்க வன்முறையை கண்டித்து - தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் :

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு களுக்கு பிறகு மேற்குவங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறையைக் கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்துடன் சேர்த்து சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து மே 5-ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது எல்.முருகன் பேசியதாவது:

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் அசாமில் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.

தமிழ் மண்ணான புதுச்சேரியில் முதல் முறையாக பாஜக கூட்டணி அரசு பதவியேற்கவுள்ளது. தமிழகத்தில் பாஜகவினர் 4 பேர் வென்று சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர். தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் 3 இடங்களைப் பிடித்த பாஜக, இப்போது 77 இடங்களில் வென்று சாதனை படைத்துள்ளது. மம்தா பானர்ஜியின் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்துள்ளார். இதனால் அவர் விரக்தி அடைந்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியானபிறகு மேற்கு வங்க அரசின் தூண்டுதலின் பேரில் மம்தா கட்சியினர் அங்கு பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுக்காக தேர்தல் பணியாற்றியவர்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாஜகநிர்வாகிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் பலர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள். 19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே, மேற்கு வங்க அரசு மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எல்.முருகன் பேசினார்.

மம்தா பானர்ஜியின் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இதனால் அவர் விரக்தி அடைந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x