Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த - தொகுப்பூதிய செவிலியர்கள் 1,212 பேர் பணி நிரந்தரம் : தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு; மே 10-ம் தேதிக்குள் பணியில் சேர உத்தரவு­

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2015, 2019-ம் ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலபோராட்டங்களில் இந்த செவிலியர்கள் ஈடுபட்டனர்.

2017-ம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் 3 நாள் தொடர் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பங்கேற்றனர். அதன் பிறகு அவர்களது ஊதியம் ரூ.7,500-ல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. முதல்கட்டமாக 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட செலிவியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

மே 10-க்குள் சேர வேண்டும்

இந்நிலையில், தற்போது 1,212 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான ஆணையை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் குருநாதன் வெளியிட்டுள்ளார். 1,212 பேரும் ஒப்பந்த செவிலியர் பணியில் இருந்து மே 5-ம் தேதி (இன்று) விடுவிக்கப்படுகின்றனர். 10-ம்தேதிக்குள் அவர்கள் பணியில் சேர வேண்டும் என்று ஆணையில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால், இவர்கள் அனைவரும் சென்னை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற உள்ளனர். பின்னர், அவர்கள் தங்களது மாவட்டங்களுக்கு செல்வார்கள். தொகுப்பூதியத்தில் ரூ.15ஆயிரம் ஊதியம் பெற்று வந்த இவர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டதால் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம்கிடைக்க உள்ளது.

இதுதொடர்பாக செவிலியர்களிடம் கேட்டபோது, “தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த 1,212 பேரில் ஆண் செவிலியர்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. பணி நிரந்தரம் செய்வதற்கு 2 ஆண்டுகள் பணியாற்றி இருக்கவேண்டும். ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும்200-க்கும் மேற்பட்ட ஆண் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர்.

ஸ்டாலினுக்கு வாழ்த்து

தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வளர்மதி கூறும்போது, “தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனைத்து செவிலியர்கள் சார்பில்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற தொகுப்பூதிய செவிலியர்கள், கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x