Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

புதுச்சேரியில் மே 10 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

புதுச்சேரியில் மே 10 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, துணைநிலை ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்குகரோனா பரிசோதனை மையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இம்மருத்துவமனைக்குப் புறநோயாளிகளாக வரும் கர்ப்பிணிப் பெண்கள் கரோனா பரிசோதனைக்காக இந்திரா காந்தி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ஏற்கெனவே நான் இந்த மருத்துவமனைக்கு வந்து ஆய்வு செய்து எந்த வகையில் பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள் என்பதைக் கேட்டறிந்தேன். உள்நோயாளிகளுக்கு இங்கேயே பரிசோதனை செய்கிறார்கள். புறநோயாளிகளாக வரும் கர்ப்பிணிகள் வெளியே அனுப்பப்பட்டுதான் பரிசோதனை மேற்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்லியிருந்தேன்.

புறநோயாளி கர்ப்பிணிப் பெண்கள் வெளியே சென்று அலையக் கூடாது என்பதால், இங்கேயே பரிசோதனை செய்து கொள்ள, பரிசோதனை முகாம் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. கரோனாவைக் கட்டுப்படுத்த அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

சாலையில் வரும்போது மக்கள்நடமாட்டம் அதிக அளவு இருக்கிறது. மக்கள் நலனுக்காகத்தான் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் அதிக அளவில் வெளியே வருகின்றனர். முழுமையாகக் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டுச் சென்றுவிடலாம். ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், மக்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காகத்தான் அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆகவே, ஒரே நேரத்தில் பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு, சாலையில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும். அவ்வாறு சாலையில் நடமாடுவதைத் தவிர்க்கவில்லை என்றால், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டி வரும்.

உங்களுக்கு (மக்கள்) கொடுக்கப்படும் சில சலுகைகள் தவறாகப்பயன்படுத்தப்பட்டு, வெளியே நடமாடும்போது கரோனா அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இன்று வரை அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடியிருக்கும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இது அடுத்த திங்கள் கிழமை (மே 10) வரை நீட்டிக்கப்படுகிறது. கூடுதலாக ஒரு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அது, அனைவரும் வீட்டிலேயே இருங்கள். கட்டுப்பாடு சட்ட விதிகளின்படிதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில்லை.

மக்கள் கட்டுப்பாடோடு இருந்து, கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் வீட்டிலேயே சுயக்கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அவசியம் இன்றி வெளியே வர வேண்டாம். அவ்வாறு சுற்றினால் கரோனா தொற்றிக்கொள்ளும்.

நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் பிரதிநிதிகளும், தொண்டர்களும் கூட்டம் கூடுவதை தவிர்த்தனர். அவர்களைப் பாராட்டுகிறேன். இந்த நிலை தொடர வேண்டும். கூட்டம் கூடாமல் வெற்றி விழாக்களை கொண்டாட வேண்டும்.

சுமார் ரூ.11 கோடி செலவில்50 வெண்டிலேட்டர் கருவிகள்,100 மானிட்டர், 10 ஆம்புலன்ஸ்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 500 தீவிர சிகிச்சைப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இணைக்கப்பட்ட படுக்கைகளையும் அதிகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x