Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

கும்பகோணத்தில் தொடர்ந்து 6 முறை வென்ற திமுக : திருவிடைமருதூர் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக கோவி.செழியன் வெற்றி

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் திமுக தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.

கும்பகோணம் தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றது. அதன்பின்னர், 1977-ம் ஆண்டு அதிமுகவும், 1980, 1984-ம் ஆண்டுகளில் மீண்டும் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன.

இதையடுத்து, 1989-ம் ஆண்டு கும்பகோணத்தில் முதன்முறையாக கோ.சி.மணி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவின் ராம.ராமநாதன் வெற்றி பெற்றார்.

அதன்பிறகு 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் திமுகவின் சார்பில் கோ.சி.மணி போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார். இதையடுத்து, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பில் சாக்கோட்டை க.அன்பழகன் கும்பகோணம் தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்.

கும்பகோணம் தொகுதியில் 1996 முதல் தொடர்ந்து 6-வது முறையாக திமுக வெற்றி பெற்றுள்ளது.

திருவிடைமருதூர் தொகுதியில்

திருவிடைமருதூர் தனி தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வென்று எம்எல்ஏவாக கோவி.செழியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த தொகுதியில் 2011-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் டி.பாண்டியராஜனை எதிர்த்து போட்டியிட்ட கோவி.செழியன் 394 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2016-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் யு.சேட்டுவை எதிர்த்து போட்டியிட்டு, 532 வாக்கு வித்தியாசத்தில் கோவி.செழியன் வெற்றி பெற்றார். இரண்டு முறையும் அவரது வெற்றிக்கு அஞ்சல் வாக்குகளே கை கொடுத்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் 3 சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணி முன்னிலை வகித்தார். ஆனால், 4-வது சுற்று முதல் 26-வது சுற்றுவரை தொடர்ந்து கோவி.செழியன் முன்னிலையில் இருந்து, 10,680 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் திமுகவினர் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த தொகுதியில் கோவி.செழியன் தொடர்ந்து 3 முறையாக வென்று, சாதனை படைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x