Last Updated : 04 May, 2021 03:14 AM

 

Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் - தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் விவகாரம் : அதிக வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில், 5 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கனிசமான வாக்குகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். கோவில்பட்டி தொகுதியில் மட்டும் இக்கட்சி வேட்பாளர் 4-ம் இடத்தை பிடித்துள்ளார். கோவில்பட்டியை தவிர மற்ற 5 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.வேல்ராஜ் 30,937 வாக்குகளை பெற்றுள்ளார். தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில் சீமானுக்கு அடுத்தபடியாக, அதிக சதவீத வாக்குகளை வேல்ராஜ் பெற்றுள்ளார். திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான்அந்த தொகுதியில் பதிவான வாக்குகளில் 24.3 சதவீத வாக்குகளை (48,597) பெற்றுள்ளார். அதற்கு அடித்தபடியாக தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் வேல்ராஜ் 16.42 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மைக்கேல் 38,872 வாக்குகள் பெற்றிருந்தபோதிலும், அந்த தொகுதியில் மொத்த வாக்குகள் அதிகம் என்பதால், அவர் 10.01 சதவீத வாக்குகளை தான் பெற்றுள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரம்

ஸ்டெர்லைட் விவகாரமே வேல்ராஜ் அதிக வாக்குகளை பெறமுக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்களில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வேல்ராஜ் முக்கிய பங்காற்றியுள்ளார். அவருக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகேயுள்ள மடத்தூர், மீளவிட்டான் போன்ற இடங்கள், திரேஸ்புரம், குரூஸ்புரம், லயன்ஸ் டவுன் உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் என, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

இந்த இடங்களில் அவர் தமாகாவேட்பாளரை விட கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார். குறிப்பாக திரேஸ்புரத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுக, தமாகா இரு வேட்பாளர்களையும் விட அதிக வாக்குகளை பெற்றுள்ளார்.

ஓட்டப்பிடாரம்

இதேபோல் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதி ஓட்டப்பிடாரம் தொகுதியில் தான் உள்ளது. இந்த ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற பெரும்பாலான கிராமங்கள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தான் வருகின்றன.

இந்த பகுதியில் உள்ள மக்கள்அதிகம் நாம் தமிழர் கட்சிவேட்பாளருக்கே வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.வைகுண்டமாரி 22,413 வாக்குகளை பெற்றுள்ளார். அவருக்கு 12.6 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றதால் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் வாக்குகள் கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பே இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 8,510 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போதும் ஸ்டெர்லைட் விவகாரம் கடுமையாக எதிரொலித்தது. அதன் காரணமாக தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் 49,222 வாக்குகளை பெற்றார்.சட்டப்பேரவை தொகுதி வாரியாகபார்க்கும் போது, அப்போதும் தூத்துக்குடி (13,682), ஓட்டப்பிடாரம் (11,089) தொகுதிகளில் தான் அவருக்கு அதிக வாக்குகள் கிடைத்தன.

விரைவில் நல்ல மாற்றம்

இதுகுறித்து தூத்துக்குடி தொகுதி வேட்பாளரான, நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் வேல்ராஜ் கூறும்போது, “ தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு தான் மக்கள் அதிகம் வாக்களித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமான வாக்குகளை அளித்துள்ளனர். தமிழகத்தில் மாற்றத்தை நாம் தமிழர் கட்சியால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என, மக்கள் நினைக்க தொடங்கிவிட்டனர். விரைவில் நல்ல மாற்றம் வரும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x