Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி - தமிழக முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின் : 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது திமுக

சென்னை

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்த லில் திமுக கூட்டணி 158 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள் ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கிறது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு அமைக் கப்பட்ட 15-வது சட்டப்பேரவையின் பத விக்காலம் வரும் மே 23-ம் தேதி முடிவடை கிறது. இதையடுத்து, 16-வது சட்டப்பேர வையை அமைப்பதற்கான பொதுத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்ட மாக நடத்தப்பட்டது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டன. இதனால் 5 முனைப்போட்டி நிலவியது.

பேரவைத் தேர்தலில் 72.79 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப் பட்டு, மாநிலம் முழுவதும் அமைக்கப் பட்டிருந்த 76 வாக்கு எண்ணும் மையங் களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டன.

இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தபால் வாக்குகளை அளித்திருந்த நிலையில், மேஜைக்கு 500 என்ற அடிப்படையில்வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போதே, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியும் தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ணத் தொடங் கிய நிலையில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. மின்னணு வாக் குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், முதல் 2 சுற்று களில் திமுக, அதிமுக இடையில் சிறிய வித்தியாசமே இருந்தது. அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணத் தொடங்கிய நிலையில், காலை 11 மணிக்கு அதிமுகவைவிட 50 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றது. சில தொகுதிகளில் ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை மாறி, மாறி வந்தது.

பிற்பகல் 2.30 மணி முதலே வேட் பாளர்களின் வெற்றி அறிவிப்புகள் வெளி யாகத் தொடங்கின. திமுக கூட்டணி 158 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 76 தொகுதிகளிலும் முன்னிலை பெற் றிருந்தன.

திமுகவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப் பன், தங்கம் தென்னரசு உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள் ளூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளை திமுக கைப்பற்றியது.

இபிஎஸ், ஓபிஎஸ் வெற்றி

அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழ கன், கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், ஓ.எஸ்.மணியன், சி.விஜய பாஸ்கர், கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதய குமார், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி), ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு) ஆகியோரும் இந்தத் தேர் தலில் வெற்றி பெற்றுள்ளனர். கோவில் பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தோற்கடித்துள்ளார்.

இதேபோல் அமைச்சர்கள் டி.ஜெயக் குமார், சி.வி.சண்முகம். எம்.சி.சம்பத், சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜேந் திரபாலாஜி, கே.சி.வீரமணி, பா.பெஞ்ச மின், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜ லட்சுமி, கே.பாண்டியராஜன் உள்ளிட் டோர் தோல்வியைத் தழுவியுள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களில் அதிக இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது. ஒரு சில தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3-வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தது. அதைத் தொடர்ந்து நடந்த 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடித்துள்ளதால் அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையமும் சென்னை உயர் நீதிமன்றமும் தடை விதித்திருந்தபோதும், சில இடங்களில் திமுகவினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானதும் திமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் கூடி, சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை தேர்ந்தெடுப்பார்கள். அதன்பின், ஆளுநரை ஸ்டாலின் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததும் ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச் சரவை பொறுப்பேற்கிறது.

வெற்றி நிலவரம் வெளியான நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்ப்பேட்டை வீட்டில் நேற்று மாலை சந்தித்த தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், வணிகவரித் துறை செயலர் பீலா ராஜேஷ், டிஜிபி ஜே.கே.திரிபாதி, டிஜிபிக்கள் ஷகில் அக்தர், கந்தசாமி, கூடுதல் டிஜிபிக்கள் ரவி, சங்கர் ஜூவால், ஐஜி சாரங்கன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

எளிமையாக பதவியேற்பு

சென்னை கொளத்தூரில் 3-வது முறையாக வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது வெற்றிச் சான்றிதழை நேற்றிரவு 12 மணி அளவில் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘‘திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம். மே 4-ம் தேதி (நாளை) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும். கரோனா பரவல் அதிகம் இருப்பதால் அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும். பதவியேற்பு நடைபெறும் தேதி, நேரம் விரைவில் அறிவிக்கப்படும். திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள்கூட இவர்களுக்கு வாக்களிக்காமல் விட்டு விட்டோமே என்று எண்ணும் அளவுக்கு திமுக ஆட்சி அமையும்’’ என்றார்.

கன்னியாகுமரியில் காங்கிரஸ்

கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நேற்று இரவு 11 மணியளவில் 23 சுற்றுகள் நிறை வடைந்திருந்த நிலையில் காங்கிரஸின் விஜய் வசந்த் 1 லட்சத்து 34,374 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். அவர் 5 லட்சத்து 67,280 வாக்குகளும் பாஜக வின் பொன் ராதாகிருஷ்ணன் 4 லட்சத்து 32,906 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, சோனியா வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஸ்டாலினை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதற்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள்.கரோனா நோய்த் தொற்றை ஒழித்து, பிராந்திய விருப்பங்களை நிறைவேற்ற, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த நாம் இணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ‘திமுகவும் காங்கிரஸும் இணைந்து தமிழக மக்களின் கனவுகளை நனவாக்கப் பாடுபடுவோம்’ என அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x