Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

உடுமலை கோட்டத்தில் பல ஆண்டுகளாக தொடரும் - காவல் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை : பல்வேறு பகுதிகள் தவறுதலாக இணைக்கப்பட்டதால் நிலவும் சிக்கல்

உடுமலை காவல் கோட்டத்தில் பல்வேறு பகுதிகள் தவறுதலாக மாறி, மாறி இணைக்கப்பட்டுள்ளதால், பல ஆண்டுகளாக தொடரும் காவல் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தளி, குமரலிங்கம், அமராவதி நகர், கணியூர் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இதன் காவல் ஆளுகைக்கு உட்பட்ட கிராமங்கள் பெரும்பாலும் வருவாய் மற்றும் ஒன்றியங்களின் ஆளுகைக்கு உட்பட்ட கிராமங்களாகவே உள்ளன. சில கிராமங்கள் மட்டும் வருவாய், ஒன்றியம் ஆகியவை ஒன்றாக இருந்தபோதும், காவல் நிலைய எல்லை மாறுபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

உடுமலை காவல் நிலையத்துக்கு உட்பட்டு நகரம் மற்றும் 17 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பொது அல்லது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எழும்போது, உடுமலை வட்டாட்சியர், ஒன்றிய ஆணையாளர், காவல் ஆய்வாளர் ஆகியோர் மக்களை சந்திக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும் முடிகிறது. இது நடைமுறைக்கு சாத்தியமானதாகவும் உள்ளது. இதில் வட்டாட்சியர், ஒன்றிய ஆணையாளர் வேறு, வேறாக உள்ள கிராமங்களில் நிகழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல் நிலவுகிறது.

முரண்பாடு

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "உடுமலை காவல் நிலைய ஆய்வுக்கு உட்பட்ட பாலப்பம்பட்டி கிராமம் மடத்துக்குளம் காவல் நிலையத்துடனும், தாந்தோணி ஊராட்சி கணியூர் காவல் நிலையத்துடனும் இணைக்கப்பட வேண்டும். இதேபோல குடிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட மெட்ராத்தி, பனத்தம்பட்டி, இச்சிப்பட்டி, ராமேகவுண்டன்புதூர், தாசர்பட்டி ஆகிய கிராமங்கள் கணியூர் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன் தவறுதலாக வேறு காவல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டதன் மூலமாக வருவாய், ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி, காவல் உள்ளிட்ட அரசு துறைகளிடையே முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன" என்றனர்.

எஸ்.பி. முடிவைப் பொறுத்தது

உடுமலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் ரவிக்குமார் கூறும்போது, "தற்போதுள்ள காவல் நிலைய எல்லைகள், பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டவை. காவல் நிலைய எல்லைகள் வகுப்பது காவல் கண்காணிப்பாளரின் முடிவை பொறுத்தது. நான் பொறுப்பேற்ற பின் இதுதொடர்பான கோரிக்கை எதுவும் எனது கவனத்துக்கு கொண்டுவரப்படவில்லை. எனக்கு முன் பொறுப்பில் உள்ளவர்கள் மூலமாக ஏதாவது மனு பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்" என்றார்.

நடவடிக்கை இல்லை

மடத்துக்குளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் கூறும்போது, "அந்தந்த ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்கள், அதே ஒன்றியத்துக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். அதுதான் அனைவருக்கும் எளிதானது. ஆனால் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் காவல் நிலையங்களில் கிராமங்கள் மாறி, மாறி இருப்பது சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் பலமுறை வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x