Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM

சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்த ‘சின்னக் கலைவாணர்’ விவேக் : தெலங்கானா ஆளுநர் தமிழிசை, ரஜினி, கமல், தலைவர்கள் இரங்கல்

நடிகர் விவேக் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இரங்கல் செய்தியில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: நடிகர் விவேக்காலமான செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தேன். தனது நகைச்சுவை நடிப்பின் மூலம் சமுதாய சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றுமக்களால் சின்னக் கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர். சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலராக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுவைத்து இயற்கை வளங்களைப் பாதுகாத்தவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சர் ஜெயக்குமார்: விவேக் பன்முகத் தன்மை கொண்டவர். மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துகளை திரைப்படங்களில் தெரிவித்தவர். இயற்கை மீது பேரன்பு கொண்டவராக இருந்தார். அவரது இழப்பு தமிழ் சமூகம், திரையுலகம் மட்டுமல்லாமல், இயற்கை ஆர்வலர்களுக்கும் பேரிழப்பு.

செய்தி, மக்கள் தொடர்பு துறைஅமைச்சர் கடம்பூர் ராஜு: நகைச்சுவை நடிகர் என்பதை தாண்டி, விவேக் ஒரு சமூக சீர்திருத்தவாதி, நல்ல சிந்தனையாளர், மண்வாசனை கொண்ட நல்ல மனிதர். தான் பிறந்த ஊரான கோவில்பட்டி மக்கள் மீது மிகுந்த பற்றும், பாசமும் கொண்டவர். நான் கோவில்பட்டி எம்எல்ஏவாக இருந்தபோது, ‘கிரீன் கலாம்’ அமைப்பின் மூலம் 10 லட்சம் மரக்கன்றுகளை கோவில்பட்டி தொகுதியில் நட்டவர்.

நடிகர் ரஜினிகாந்த்: சின்ன கலைவாணர், சமூக சேவகர், எனது நெருங்கிய இனிய நண்பர் விவேக்கின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ‘சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக் ஆத்மா சாந்தி அடையட்டும்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: நடிகனின் கடமை நடிப்பதோடு முடிந்தது என இருந்துவிடாமல், தனக்குச் செய்த சமூகத்துக்கு தானும் ஏதேனும் செய்ய விரும்பியவர், செய்தவர் நண்பர் விவேக். மேதகு கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம்வந்த விவேக்கின் மரணம் தமிழ் சமூகத்துக்கு பேரிழப்பு.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: திரைத் துறையில் பெருவெற்றி பெற்ற விவேக் சமூக சீர்திருத்தக் கருத்துகளை தன் படங்களில் வெளிப்படுத்தி, அதையே தன் அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர். பல படங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துகளை பரப்பி, நம்மால் ‘பெரியார் விருது’ வழங்கி பாராட்டப்பட்டவர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அற்புதமான பண்பாளர், மனிதநேயர், தூய சிந்தனை கொண்ட ஒரு மனிதரை இழந்திருக்கிறோம். அவரது மறைவுகலைத் துறை, தமிழ் சமுதாயத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா: திரையுலகில் சிரிப்போடும், சிந்தனையோடும் பகுத்தறிவு கொள்கைகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞரானவிவேக்கின் மறைவு கலையுலகத்துக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும் பேரிழப்பு. திரையுலகில் பகுத்தறிவு கொள்கைகளால் பெற்ற அவரது இடத்தை ஈடுசெய்ய திரையுலகம் வெகு காலம் போராட வேண்டி இருக்கும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: நடிப்பை ஒரு தொழிலாக மட்டும் பார்க்காமல், சமூக மேம்பாட்டுக் கருவியாகவே பயன்படுத்தினார். தான் ஈட்டிய பொருளின் பெரும்பகுதியை, சமூகத் தொண்டு அறப்பணிகளுக்காக செலவிட்டார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் : திரைத் துறைக்கு வெளியிலும் சமூகப் பொறுப்பு மிக்கவராக திகழ்ந்தார். மரம் நடுவதை தனது சமூகக் கடமையாகக் கொண்டு, பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தவர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராக, செயற்பாட்டாளராக திகழ்ந்தார். ஜனங்களின் கலைஞன் என கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழ் மீது அக்கறை கொண்டு பல நல்ல கருத்துகளை எடுத்துரைத்து, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து சின்னக் கலைவாணர் என போற்றப்பட்ட விவேக்குக்கு இணை வேறு எவரும் இல்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சமக தலைவர் சரத்குமார், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள்கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பாரிவேந்தர் எம்.பி. உள்ளிட்ட தலைவர்களும் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x