Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

கோவை போத்தனூர்-பாலக்காடு வழித்தடத்தில் - ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க தீர்வு : மத்திய அமைச்சருக்கு பொள்ளாச்சி எம்.பி. கடிதம்

கோவை போத்தனூர்-பாலக்காடு வழித்தடத்தில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சருக்கு பொள்ளாச்சி எம்பி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை போத்தனூர் - பாலக்காடு வழித்தடத்தில் யானைகள் அடிக்கடி ரயில் மோதி உயிரிழப்பது தொடர்பாக, சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர், தெற்கு ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு பாலக்காடு கோட்ட மூத்த பொறியாளர் ஆனந்தராமன் அளித்த பதிலில், “கஞ்சிக்கோடு - மதுக்கரை இடையிலான ஏ லைன் மற்றும் பி லைன் ரயில் தண்டவாளங்கள் வனப்பகுதியை ஒட்டி செல்வதால் அடிக்கடி ரயில்கள், யானை மீது மோதும் விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம்ஆண்டு வரை 8 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன" என்று தெரிவித்திருந்தார். இந்த ரயில்பாதை அமைந்துள்ள பகுதி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் வருவதால் அதன் உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம்எழுதியுள்ளார். அதில் கூறியிருப் பதாவது: அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் பிலைன் ரயில் பாதையை மாற்றும் திட்டம் இல்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

வனத்தில் உள்ள மரங்களை வெட்டாமல் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில், வனத்தில் உள்ள யானை உள்ளிட்ட பெரிய மற்றும் சிறிய உயிரினங்களின் உயிரிழப்பை தடுப்பதும் அவசியமாகும். ரயில் பாதையை ஒட்டிய வனத்தை சீர்செய்ய எவ்வளவு தொகையைச் செலவிட்டுள்ளோம் என்பதை ஆராய்வதற்கு பதில், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் வழக்கமாக பாதையைக் கடக்கும் இடத்தில் ரயில்கள் செல்லும் வேகத்தை குறைக்க ரயில்வேக்கு அறிவுறுத்தலாம். மேலும், யானைகள் கடக்கும் இடத்தை ரயில் ஓட்டுநர்களுக்கு தெரிவிக்கும் அறிவிப்பு பலகைகள், ஒலி அலாரங்கள் ஆகியவற்றை முக்கிய இடங்களில் அமைக்கலாம். எதிர்காலத்தில் விபத்து நடைபெறாமல் தவிர்க்க தற்காலிகமாக இரவு நேரத்தில் பி லைன் பாதையில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும். நிரந்தர தீர்வாக பி லைன் பாதையை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x