Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

‘பிலவ’ தமிழ் புத்தாண்டு இன்று பிறக்கிறது - ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து :

‘பிலவ’ தமிழ் புத்தாண்டு இன்று பிறக்கிறது. இதை முன்னிட்டு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள்:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ஆண்டுதோறும் சித்திரை முதல்நாள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது, பாரம்பரியம், பழமை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த புத்தாண்டில் தமிழக மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை பெற வேண்டும்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: இச் சித்திரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவும், வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து ஒளிகூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு இப்புத்தாண்டு வழங்கவும் வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி: தமிழ்ப்பெருமக்கள் பல்லாண்டு காலமாகசித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். மலரும் இப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்துகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: இந்த தமிழ் புத்தாண்டு, தமிழர்கள் இழந்த உரிமைகள், தன்மானத்தை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டை பாதுகாக்கவும் வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பாமக தலைவர் ராமதாஸ்: தமிழகத்தில் அனைத்து மக்களின் வாழ்விலும் மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க இந்த சித்திரை திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: பிறக்கும் தமிழ் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாதவாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துகள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மலரும் சித்திரையில் தளரும் பகை, வளரும் நகை என்று மகிழ்வுடன் இந்நாளை கொண்டாடி மகிழ்வோம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்: சித்திரை முதல் நாளில் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு எல்லா வளங்களையும் நலன்களையும் கொண்டு வந்து சேர்த் திடும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகம் மற்றும் உலக வாழ் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர்சத்குரு: கடந்த வருடம் நமக்கு சவாலான வருடமாக அமைந்திருந்தது. கரோனா பெருந்தொற்றால் அனைவரும் பல துயரங்களைச் சந்தித்தனர்.இப்போது நாம் பிலவ வருடத்துக்குள் கால் வைக்கப் போகிறோம். இந்த வருடத்தில் தமிழ் மக்கள் தேவையான விவேகத்துடன் செயல்பட்டு, கரோனா சூழ்நிலையைக் கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்.

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்: உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் நலமுடனும், வளமுடனும் இருக்க ‘பிலவ’ தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஞ்ஞானத்தால் இயற்கையை கட்டுப்படுத்த முடியாது. மெய்ஞானத்தை கடைபிடித்து பெரியவர் சொல் கேட்டு செயல்பட வேண்டும். ஒவ்வொருவரும் தன்னைஅறிந்து, செயல்பட்டால் எந்த குறையும் கிடையாது. இந்த ஆண்டு நல்லமழை உண்டு, உணவு பஞ்சம், குடிநீர்பஞ்சம் இருக்காது. ஆதிபராசக்தி அம்மனின் அருள் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

மேலும், அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர், சமக தலைவர் சரத்குமார், சு.திருநாவுக்கரசர் எம்பி, ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கொமதேக தலைவர் ஈஸ்வரன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x