Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

'உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை' - வெற்றி பெற முடியாமல் போனது துரதிருஷ்டம் : ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் உருக்கம்

மும்பை

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது துரதிருஷ்டவசமானது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, த்ரில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. 222 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் சேர்த்து போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

119 ரன்கள் விளாசல்

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து கடைசி வரை போராடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 119 ரன்கள் விளாசினார்.அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் முதல் 3 பந்துகளில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது. 4-வது பந்தை சாம்சன் சிக்ஸருக்கு விளாசினார். 5-வது பந்தில் ஒரு ரன் ஓடுவதற்கு வாய்ப்பு இருந்த போதும் சாம்சன் ஓடவில்லை. சிக்ஸர் அடித்தால் வெற்றி என்றநிலையில் கடைசி பந்தை சாம்சன் டீப் கவர் திசையை நோக்கி விளாசினார். ஆனார் பந்து எல்லைக்கோடு அருகே நின்ற தீபக் ஹுடாவிடம் கேட்ச் ஆனது.

ஆட்டம் முடிவடைந்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்போது, ‘‘எனது உணர்வுகளை விளக்க வார்த்தைகள் இல்லை. மிக நெருக்கமாகச் சென்ற நிலையில் துரதிருஷ்டவசமாக வெற்றி கோட்டை கடக்க முடியாமல் போய்விட்டது. நான் இதைவிட அதிகமாகஎதையும் செய்திருக்க முடியும் என்று நினைக்கவில்லை. சரியான டைமிங்கில் தான் கடைசி பந்தைவிளாசினேன். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கு நின்ற பீல்டரை கடக்க முடியாமல் போனது.

சிறப்பாக விளையாடினோம்

இரு அணியின் பந்து வீச்சாளர்களுமே அதிக ரன்களை விட்டுக்கொடுத்தனர். இது ஆட்டத்தின் ஒருபகுதியாகும். ஆடுகளம் பேட்டிங்குக்கு சிறப்பாகவே இருந்ததால் இலக்கை துரத்த முடியும் என்றே கருதினோம். தோல்வியடைந்த போதிலும் அணி சிறப்பாக விளையாடியதாகவே நினைக்கிறேன்.

எனது இன்னிங்ஸின் 2-வதுபகுதிதான் நான் விளையாடியதிலேயே சிறந்தது. நான் எனது பகுதியில் இருக்கும் போது பந்துகளை நன்கு கவனிக்க முடிகிறது. இதனால் இயல்பாகவே சிக்ஸர்கள் அடிக்க முடிகிறது’’ என்றார்.

ராஜஸ்தான் அணி தனது அடுத்த ஆட்டத்தில் டெல்லிகேபிடல்ஸ் அணியுடன் நாளைமோதுகிறது.

நேரலை: ஸ்டார்ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x