Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் - கரோனா தடுப்பு பணியில் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும் : திருப்பூர் ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு அலுவலர் அறிவுறுத்தல்

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் கரோனா தடுப்பு பணியில் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டுமென, திருப்பூர் ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையிலும், மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலருமான கே.கோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.

முகக்கவசம் கட்டாயம்

இதில் முதன்மைச் செயலர் கே.கோபால் பேசியதாவது:

பொதுமக்கள் அதிகம் கூடும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. மேற்கண்ட இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதில்லை. அதேபோல, வழிபாட்டுத் தலத்தின் முன்பு பெட்டிக் கடைகள் வைத்திருப்போரும் முகக் கவசம் அணிவதில்லை. இந்த முறை கரோனா தொற்றை தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடந்த முறை முதியவர்களின் மீது கவனம் செலுத்தினோம். தற்போது குழந்தைகளும் ஆங்காங்கே பாதிக்கப்படுகிறார்கள்.

மளிகைக் கடைகள், பெட்டிக் கடைகள், தேநீர் கடைகள், பேக்கரி, பூ, காய்கறி மற்றும் இறைச்சி சந்தைகளில் இருப்போர் நாளொன்றுக்கு 100 முதல் 150 பேரை சந்திப்பதால், அவர்களின் பாதுகாப்பு அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதனை மாநகராட்சி ஆணையர், மாநகரக் காவல் ஆணையர் ஆகியோர் கண்காணிக்க வேண்டும்.

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், திருப்பூரில் தொற்று பரவ கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஆகவே, தொழிற்சாலைகளில் முகக் கவசம், கிருமிநாசினி, உடல் வெப்பநிலையை கண்காணிக்கும் வெப்பமானி உள்ளிட்டவற்றை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

இதுதொடர்பாக நிறுவனத்தின் முகப்பில் விழிப்புணர்வு பதாகைகள் அல்லது சுவரொட்டி ஒட்டப்பட வேண்டும். தவறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர உதவி எண் 1075 புகார் அளிக்கும் வகையில், பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தடுப்பூசி ஏன் போடவில்லை?

முன்னதாக, திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், பழைய பேருந்து நிலையம், வணிக நிறுவனங்கள், தேநீர் கடைகள், திருப்பூர் கிரி நகர் (கட்டுப்படுத்தப்பட்ட பகுதி) தனியார் பின்னலாடை நிறுவனம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் எத்தனை பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள் என்பதையும் கேட்டறிந்தார். அப்போது, வயதான அரசு ஊழியர் ஒருவரை ஏன் தடுப்பூசி போடவில்லை? என கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x