Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM

எட்டயபுரம் பேரூராட்சியில் தரமற்ற சாலைகள் : ஆய்வு செய்ய பாஜகவினர் கோரிக்கை

எட்டயபுரம் பகுதியில் தரமற்ற முறையில் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாஜகவினர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பாஜக வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஆத்திராஜ் தலைமையில் பாஜகவினர் நேற்றுகாலை எட்டயபுரம் பேரூராட்சிஅலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலைகளை ஆய்வு செய்ய வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.

பின்னர், அவர்கள் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், எட்டயபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட சாலை பாதை, பழைய சந்தைபேட்டை சாலை, பழைய போலீஸ் லைன் தெரு, பட்டத்து விநாயகர் கோயில் தெரு ஆகிய இடங்களில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சாலைகளில் வெடிப்பு ஏற்பட்டு மக்கள் நடந்து செல்லக்கூட முடியாத அளவில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சாலையில் இருந்து கற்கள் வெளியே தெரிவதால் முதியோர், குழந்தைகள் நடந்து செல்ல முடியவில்லை. சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் எம்.சாண்ட் தூசிப் படலம் ஏற்படுகிறது. எனவே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் சாலைகளை ஆய்வு செய்து தரமற்ற சாலைகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். சிங்காரத்தோப்பு பகுதியில் கழிவுநீர் செல்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதனை சரி செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x