Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

அசம்பாவிதமின்றி நடந்த சட்டப்பேரவை தேர்தல் - காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி பாராட்டு :

போலீஸாரின் சிறப்பான பாதுகாப்பு பணிகளால், அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி தமிழக சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப் பதிவின்போது ஏதாவது அசம்பா விதங்கள் நடந்து விடுமோ என்ற அச்சம் போலீஸாரிடம் இருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

வாக்குக்கு பணம் மற்றும் டோக்கன் கொடுத்தது, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதது, தனது வாக்கை மற்றொருவர் போட்டு விட்டுச் சென்றது, வாக்குச்சாவடி அருகே பிரச்சாரம் செய்தது, வேட்பாளரின் கார் மீது கல் வீசியது, வாக்குச்சாவடிகள் அருகே போலீஸாரின் தடுப்புகள் இருந்ததால் உள்ளூர் பகுதி மக்கள் வாக்குவாதம் செய்தது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, திரையுலகப் பிரபலங்கள் வந்தபோது ரசிகர்கள் அத்துமீறி நடந்து கொண்டது போன்ற சிறு பிரச்சினைகள் மட்டுமே ஏற்பட்டன. அவை அனைத்தையும் போலீஸார் சிறப்பாக சமாளித்தனர். போலீஸாருக்கு கஷ்டம்கொடுக்கும் வகையில் வன்முறைசம்பவங்களோ, அசம்பா விதங்களோ நடைபெறவில்லை. இதனால் பாதுகாப்பு பணியில் இருந்தபோலீஸாரும், காவல் துறை அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர்.

சிறப்பாக காவல் பணி செய்ததற்காக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா, செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உள்ளிட்ட அனைத்து காவல் துறை அதிகாரிகளையும் டிஜிபி ஜே.கே.திரிபாதி பாராட்டினார்.

சட்டப்பேரவை தேர்தலன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு உணவு, தண்ணீர் போன்றவை முறையாக கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஆனாலும், போலீஸார் தாங்கள் பணி செய்த இடத்தில் இருந்து விலகிச் செல்லாமல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படும்.

இந்நிலையில், இந்த 4 மாவட்டங்களிலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில் போலீஸார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் போலீஸாரை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர். இதேபோல மே-2-ம் தேதி அன்றும் மக்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(நேற்றைய இதழில் இதே பக்கத்தில் இடம்பெற்ற திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டஎஸ்பிக்களின் பெயர்கள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டதற்கு வருந்துகிறோம். – ஆசிரியர்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x