Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

திருச்சி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட - வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன்? :

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் 73.56 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 76.08 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இந்தத் தேர்தலில் 2.52 சதவீத வாக்குகள் குறைந்துள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.

அதன்படி, 9 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரம் (அடைப்புக்குறிக்குள் 2016 தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம்): மணப்பாறை- 76.02 (78.07), ரங்கம்- 76.15 (78.95), திருச்சி மேற்கு- 67.01 (69.75), திருச்சி கிழக்கு- 66.87 (68.12), திருவெறும்பூர்- 66.61 (67.83), லால்குடி- 79.23 (81.14), மண்ணச்சநல்லூர்- 79.63 (81.57), முசிறி- 75.98 (79.64), துறையூர் தனி- 76.63 (79.66).

காரணம் என்ன?

கரோனா பரவல், கடும் வெயில் ஆகிய காரணங்களால் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், உடல் வெப்பநிலை 100 டிகிரிக்கு மேல் இருந்தவர்களை மாலை 6 மணிக்கு மேல் வருமாறு திருப்பி அனுப்பியதால், அவர்கள் மீண்டும் வாக்களிக்க வரவில்லை எனவும் தெரிகிறது. அத்துடன், நகர்ப் பகுதிகளில் வாக்காளர்கள் பலருக்கும் பூத் சிலிப் சென்று சேராததும் வாக்குப்பதிவு குறைய ஒரு காரணமாக இருக்கலாம் என அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

மாறாத இடங்கள்

அதேவேளையில், அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதத்தில் கடந்த தேர்தலைப்போலவே இந்தத் தேர்தலிலும் மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர் ஆகிய தொகுதிகள் முறையே முதல் 3 இடங்களில் வருகின்றன. இதேபோல, குறைந்தபட்ச வாக்குப்பதிவு சதவீதத்தில் திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகள் கடைசி 3 இடங்களில் உள்ளன.

75 சதவீதத்துக்கும் அதிகமாக..

இந்தத் தேர்தலில் மணப்பாறை, ரங்கம், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய தொகுதியில் 75 சதவீதத்துக்கு அதிகமாகவும், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய 3 தொகுதிகளில் 65 சதவீதத்துக்கு அதிகமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x