Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

திருப்பூர், நீலகிரி மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு - பலத்த பாதுகாப்புடன் மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு :

திருப்பூர்/உதகை

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 137 பேர் போட்டியிடும் நிலையில் 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 பேர் வாக்களிக்கின்றனர்.

அவிநாசி (தனி), திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கயம், தாராபுரம் (தனி), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 66,417, பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 93,104, மூன்றாம் பாலினத்தவர் 283 பேர் என, மாவட்டம் முழுவதும் 23 லட்சத்து 59,804 வாக்காளர்கள் உள்ளனர். 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,108 வாக்குச்சாவடி மையங்களில் 3,343 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தாராபுரம் (தனி) தொகுதியில் 14 பேர், காங்கயத்தில் 26, அவிநாசி (தனி) தொகுதியில் 12, திருப்பூர் வடக்கு 15 , திருப்பூர் தெற்கு 20, பல்லடத்தில் 20, உடுமலையில் 15, மடத்துக்குளம் தொகுதியில் 15 என 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 137 பேர் களத்தில் உள்ளனர்.

பதற்றமான 552 வாக்குச்சாவடிகள்

ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைந்தபட்சம் 15 வேட்பாளர்களுக்கான சின்னங்களும், ஒரு நோட்டா சின்னமும் இடம்பெறும். திருப்பூர் தெற்கு, பல்லடம், காங்கயம் தொகுதிகளில் 16-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இடம்பெறுவதால், மேற்கண்ட மூன்று தொகுதிகளில் மட்டும் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மற்ற தொகுதிகளில் ஓர் இயந்திரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 121 வாக்குச்சாவடி மையங்களில் 549 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 3 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும், 552 வாக்குச்சாவடிகளில் 168 நுண்பார்வையாளர்கள் (மைக்ரோ அப்சர்வர்) கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக உடுமலை தொகுதியில் 22 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

விஐபி-க்கள் யார்?

அவிநாசி (தனி) தொகுதியில் சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலும், உடுமலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணனும், தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனும் போட்டியிடுகிறார்கள். மாவட்டம் முழுவதும் 16,044 பேர் தபால் வாக்குகளை பெற்றிருந்தனர். நேற்று வரை 5,938 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி காலை 8 மணி வரை வாக்களிக்கலாம் என்பதால், தேர்தல் பணிகள் முடிந்த பிறகு பலரும் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3,871 பேர் விண்ணப்பம் கோரி இருந்த நிலையில், 3,680 பேர் வாக்களித்தனர். எஞ்சியவர்கள் வாக்களிக்கவில்லை.

பாதுகாப்பு பணி

தேர்தலையொட்டி, பள்ளி மற்றும் கல்வித் துறை, வருவாய் துறைகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் 297 மண்டலங்களாக பிரித்து அனுப்பப்பட்டன.

அதேபோல, கரோனா தொற்றுள்ள வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், மாவட்டத்தில்1500 போலீஸார், மாநகரில் 800 போலீஸார் மற்றும் இவர்களுடன் மத்திய துணை ராணுவப் படை, ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினர் என 3600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

உடுமலை

உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா முன்னிலையில் வாக்குச் சாவடிகளுக்கு தேவையான விவிபாட் மற்றும் இவிஎம் இயந்திரங்களை அனுப்பும் பணி நடைபெற்றது.

தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதியில் சார்-ஆட்சியர் பவன்குமார் முன்னிலையில் போலீஸார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கான இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

மடத்துக்குளம் சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயந்தி முன்னிலையில் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் தளிஞ்சி, மாவடப்பு, கோடந்தூர் உள்ளிட்ட மலைவாழ் வாக்குச்சாவடிகளில் 1,602 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் எண்ணிக்கை 1,716. மலைவாழ் பகுதி வாக்குச் சாவடிகளுக்கான இயந்திரங்கள், நக்சல் தடுப்பு சிறப்புப் படை வீரர்கள் பாதுகாப்புடன் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டன.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் 868 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேற்கண்ட தொகுதிகளில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

உதகை பிரீக்ஸ் மேல்நிலைப் பள்ளியில், மத்திய தேர்தல் பார்வையாளர் பனுதர் பெஹரா, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x