Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் - தனியார் மருத்துவமனை, ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு :

கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தனியார் மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

எனது தந்தை குமாருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த ஜூலை 25-ம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். சேர்க்கும்போதே ரூ.1 லட்சம்,பிறகு வெவ்வேறு கால கட்டங்களில் ரூ. 4.58 லட்சம் செலுத்தியும் எனது தந்தை ஆகஸ்ட் 3-ம் தேதிஇறந்துவிட்டார். பிறகு, அவரதுசிகிச்சைக்கான கட்டணத்தைப் பெற மருத்துவ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க சிகிச்சை அறிக்கையைக் கேட்டேன். அதற்கு எனது தந்தைக்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணின் சிகிச்சை அறிக்கையை அளித்தனர்.

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி மேலும் ரூ. 2 லட்சத்துக்கும் அதிகமாக கட்டணம் செலுத்தினால் மட்டுமே எனது தந்தையின் உடலைக் கொடுப்போம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இறுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, 10 நாட்களுக்கு மொத்தமாக ரூ.7 லட்சத்து2 ஆயிரத்து 562-ஐ அந்த மருத்துவமனைக்கு செலுத்தியுள்ளேன்.

இதுதொடர்பாக கேட்டபோது மருத்துவமனை நிர்வாகத்தினர் மிரட்டல் விடுத்தனர். எனவே கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலித்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு மற்றும் சென்னை ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும். என்னிடம் வசூலித்துள்ள கூடுதல் தொகையைதிருப்பித் தர மருத்துவமனைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்புவழக்கு விசாரணை நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன், அரசு தரப்பில் வி.சண்முகசுந்தர் ஆஜராகி வாதிட்டனர். இதுதொடர்பாக சென்னை ஆட்சியர், எம்ஜிஎம் மருத்துவமனை நிர்வாகம், தேசிய மருத்துவ ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x