Published : 03 Apr 2021 03:13 AM
Last Updated : 03 Apr 2021 03:13 AM

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் - நாளையும் வெப்பம் அதிகரிக்கும் : உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நாளையும் வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தரைக்காற்று வீசுகிறது

வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி தரைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.

3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர்,புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது வழக்கத்தைவிட 7 டிகிரி முதல் 11 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.

5-ம் தேதி கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும். இதன் காரணமாக ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக் கூடும்.

உள் மாவட்டங்களில் மழை

வெப்பச்சலனம் காரணமாக 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரைஉள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.

அந்தமான் கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.

இதன் காரணமாக அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு நா.புவியரசன் கூறினார்.

27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது வழக்கத்தைவிட 7 டிகிரி முதல் 11 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x