Published : 03 Apr 2021 03:14 AM
Last Updated : 03 Apr 2021 03:14 AM

புனித வெள்ளியை முன்னிட்டு - கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை :

புனித வெள்ளியை முன்னிட்டு சென்னை எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற சிலுவைப்பாதை மற்றும் திருச்சிலுவை ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் நேற்று நடைபெற்ற சிலுவைப் பாதை, திருச்சிலுவை ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40 நாள் தவக்காலம் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. கடந்த 28-ம் தேதி குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. அதுமுதல் ஈஸ்டர் பண்டிகை வரையிலான காலம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில், புனித வாரத்தில் வரும் பெரிய வியாழனை முன்னிட்டு, கத்தோலிக்க தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி கடந்த 1-ம் தேதி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளில் தனது 12 சீடர்களின் பாதங்களை கழுவி தூய்மைப்படுத்தியதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆலயத்திலும் பாதிரியார்கள், 12 பேரின் பாதங்களை கழுவி சுத்தப்படுத்தினர்.

இந்நிலையில், புனித வாரத்தின் முக்கிய நிகழ்வான புனித வெள்ளி நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் விதமாக, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப் பாதையும், அதைத் தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனையும் நடைபெற்றது.

சென்னையில் சாந்தோம் பேராலயம், லஸ் சர்ச், பெசன்ட் நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலும், அண்ணா சாலை கதீட்ரல் பேராலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும், ஈசிஐ உள்ளிட்ட இதர கிறிஸ்தவ சபைகளின் ஆலயங்களிலும் நடைபெற்ற புனித வெள்ளி சிறப்பு ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x