Published : 02 Apr 2021 03:12 AM
Last Updated : 02 Apr 2021 03:12 AM

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடவடிக்கை - 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய ஆ.ராசாவுக்கு தடை : நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்தும் பெயர் நீக்கம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதியில் மார்ச் 26-ம் தேதி திமுக வேட்பாளரை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச் பொதுச்செயலாளர் ஆ.ராசா, முதல்வர் பழனிசாமியின் தாய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி னார். இதுதொடர்பாக மார்ச் 27-ம் தேதி அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரத சாஹுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், "சர்ச்சைக்குரிய வகையில் பேசி தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட ஆ.ராசாவை, திமுக நட்சத்திர பேச் சாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண் டும். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதொடர் பான அறிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தார். அதன் அடிப்படை யில், ஆ.ராசாவிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டிருந்தது.

மார்ச் 31-ம் தேதி ஆ.ராசா தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்த விளக்கத்தில் "நான் தேர்தல் விதிகளை மீறி எதுவும் பேசவில்லை. பொதுமக்கள் புரிந்து கொள்ளும் விதமாக உவமானத்தை மேற்கோள்காட்டி முதல்வர், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அரசியலில் உயர்ந்ததை ஒப்பிட்டு பேசினேன். என்னுடைய முழு பேச்சையும் ஆய்வுக்கு உட்படுத்தினால் என் பேச்சில் எவ்வித அவதூறும் இல்லை என்பது தெரியவரும்" என தெரிவித்திருந்தார்.

இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக தாங்கள் (ஆ.ராசா) தெரிவித்த விளக்கம் மற்றும் உண்மைநிலை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கை, சர்ச்சைக்குரிய பேச்சு ஆகியவற்றை பரிசீலித்ததில், அந்த பேச்சு, இழிவாக இருப்பது மட்டுமல்லாது, பெண்ணின் தாய்மை குறித்து கண்ணியக்குறைவாக உள்ளது. இது கடும் தேர்தல் விதிமீறலாகும். அதன் பிறகே தங்களுக்கு (ஆ.ராசா) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் தாங்கள் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை .

எனவே, தாங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தங்கள் பெயர் நீக்கப்படுகிறது. தாங்கள் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. அது உடனடியாக அமலுக்கு வருகிறது. இனிவரும் பிரச்சாரங்களில் இதுபோன்ற இழிவான பேச்சுகளை பேசுவதை தவிர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

திமுக முறையீடு

இதனிடையே தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நேற்று ஆஜராகி முறையீடு செய்தார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தடை விதிக்கப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல. எனவே, இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அப்போது கோரினார்.

ஆனால், அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கமான முறையில் பட்டியலுக்கு வரும்போது இந்த மனு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x