Published : 28 Mar 2021 03:16 AM
Last Updated : 28 Mar 2021 03:16 AM

தமிழகத்தில் ஏப்.29-ம் தேதி வரை - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட தடை :

தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட ஏப்ரல் 29-ம் தேதி வரை தடை விதித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசாம், மேற்குவங்கம் ஆகிய 2 மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இறுதிகட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில், மேற்கண்ட 5 மாநிலங்களிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நாள் முதல், இறுதிகட்ட வாக்குப்பதிவு முடியும் நாள் வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் மார்ச் 27-ம் தேதி காலை 7 மணி முதல், ஏப். 29-ம்தேதி இரவு 7.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடக் கூடாது. அவ்வாறு வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது” என குறிப்பிட்டுள்ளார்.

வாகனப் பேரணிக்கும் தடை

தேர்தல் நாளுக்கு முந்தைய 72 மணி நேரம் முன்பு தொடங்கி இருசக்கர வாகனப் பேரணி நடத்த தடை விதித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழகதலைமை தேர்தல் அதிகாரிசத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சில இடங்களில் சமூக விரோதிகள் சிலர் பைக்குகளை பயன்படுத்தி வாக்குப்பதிவுக்கு முன்பாகவும், வாக்குப்பதிவு நாளன்றும் வாக்காளர்களை அச்சுறுத்த இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

அதனால் தேர்தல் நடைபெறும் நாளுக்கு முந்தைய 72 மணி நேரம் முன்பு தொடங்கி, தேர்தல்நாளன்றும் இருசக்கர வாகனப்பேரணி நடத்த தடை விதிக்கப்படுகிறது. இதை வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x