Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் விளாசலில் - இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது இங்கிலாந்து அணி :

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 1-1என சமநிலைக்கு கொண்டு வந்தது.

புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஷிகர் தவண் 4, ரோஹித் சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்தனர். 37 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்த கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். தனது 62-வது அரை சதத்தை அடித்த விராட் கோலி 79 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷித் பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த், கே.எல்.ராகுலுடன் இணைந்து மட்டையை சுழற்றினார். தனது 5-வது சதத்தை விளாசிய கே.எல்.ராகுல் 114 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் விளாசிய நிலையில் டாம் கரண் பந்தில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்துடன் இணைந்து கே.எல்.ராகுல் 4-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தார். மட்டையை சுழற்றி ரிஷப் பந்த் 40 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசிய நிலையில் டாம் கரண் பந்தில் வெளியேறினார்.

இதைத் தொடர்ந்த களமிறங்கிய ஹர்திக் பாண்யா 16 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் டாப்லே பந்தில் ஆட்டமிழந்தார். கிருணல் பாண்டியா 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் சேம் கரண், டாம் கரண், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 337 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 337 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜானி பேர்ஸ்டோ 112 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 124 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 52 பந்துகளில், 10 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 99 ரன்களும் விளாசினர். ஜேசன் ராய் 52 பந்துகளில் 55 ரன்களில் ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். டேவிட் மலான் 16 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டோன் 27 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 3-வது ஆட்டம் நாளை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x