Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மக்களிடம் - வளர்ச்சியா, ஊழலா, எது வேண்டும்: அமித் ஷா கேள்வி :

வளர்ச்சி திட்டங்கள் வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள். ஊழல்களை விரும்பினால் முதல்வர் மம்தா வுக்கு வாக்களியுங்கள் என்று மேற்குவங்க மக்களிடம் அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில் 8 கட்டங் களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

மேற்குவங்கத்தின் புரூலியா பகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

இடதுசாரிகள் ஆட்சி நடத்தியபோது ஆலைகள், நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டை போட்டனர். இப்போது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியிலும் அதே நிலை நீடிக்கிறது. மேற்குவங்கத்தில் இருந்துபல்வேறு நிறுவனங்கள் வெளியேறிவருகின்றன. திரிணமூல், இடதுசாரி கட்சிகளால் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. பாஜகவால் மட்டுமே மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும்.

பாஜக ஆட்சி அமைத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவரின் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மக்களின் நலனுக்காக 115 வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். அதற்கு நேர்மாறாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 115 ஊழல்களை அரங்கேற்றியுள்ளார்.

வளர்ச்சி திட்டங்கள் வேண்டும் என்றால் பிரதமர் மோடிக்கு வாக்களியுங்கள். ஊழல்களை விரும்பினால் முதல்வர் மம்தாவுக்கு வாக்களியுங்கள். விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டங்களுக்கு திரிணமூல் அரசு முட்டுக் கட்டையாக உள்ளது. பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் இரு திட்டங்களும் உடனடியாக அமலுக்கு வரும்.

மேற்குவங்கத்தில் ஊடுருவல் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மண்ணின் மைந்தர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. பாஜக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள். குடியுரிமை சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

மக்களின் நலனுக்காக பாஜக பாடுபடுகிறது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி தனது மருமகனின் நலனில் மட்டும் அக்கறை செலுத்துகிறார். மேற்குவங்கத்தின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பிரச்சினை நீடிக்கிறது. மாநில பெண்கள் பல மைல் தொலைவு நடந்து சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். பாஜக ஆட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

வரும் 2024-ம் ஆண்டுக்குள் ரூ.10,000 கோடி செலவில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். ஜங்கல் மெஹல் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும். இதன்மூலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன் அடைவார்கள். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x