Published : 22 Mar 2021 03:13 AM
Last Updated : 22 Mar 2021 03:13 AM

ஓராண்டாக நடத்துநர்கள் பணியில் சேர முடியாமல் அவதி - முதலுதவிப் பயிற்சி மையங்களைதிறக்க ஆளுநருக்கு வேண்டுகோள் :

ஓராண்டாக நடத்துநர்கள் பணியில் சேர முடியாமல் அவதிக்குள்ளாகி வருவதால், முதலுதவிப் பயிற்சி மையங்களைத் திறக்க தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இலகுரகமற்றும் கனரக பயிற்சிப்பள்ளி உரிமையாளர்கள் நலச் சங்கத் தலைவர் சி.வி.சுந்தரேஸ்வரன், தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் சுமார் 117 பயிற்சி மையங்களில் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டு, சென்னையில் உள்ள மாநில மையத்தின் மூலம் முதலுதவிச் சான்று வழங்கப்பட்டு வந்தது. ஆளுநர் தலைவராகஉள்ள `ஜான் ஆம்புலன்ஸ்' வழங்கும் முதலுதவிச் சான்றிதழைவைத்துதான், நடத்துநர் உரிமமும்,நடத்துநர்,ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பும் பெற முடியும். இந்நிலையில், கடந்த 2020 ஜனவரி முதல் தமிழகத்தில் முதலுதவிச் சான்றிதழ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் புதிதாக நடத்துநர் உரிமம் பெற இயலாமலும், நடத்துநர்களும், ஓட்டுநர்களும் அரசுப் பணி யில் சேர முடியாமலும் உள்ளனர்.

தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் முதலுதவிச் சான்று பெற இயலாததால், பணிக்குச் சேர இய லாமல், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, ஓராண்டுக்கும் மேலாகநிறுத்திவைக்கப்பட்டுள்ள முதலுதவிப் பயிற்சி மையங்களை திறப்பதுடன், பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க உரிய உத்தரவு பிறப்பித்து உதவ வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தில், ‘அரசு பதிவு பெற்ற மருத்துவர்களிடமிருந்து முதலுதவிப் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழை ஏற்றுக்கொள்ளலாம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயிற்சி மையங்களை உடனடியாக திறப்பதில் ஏதேனும்தாமதம் ஏற்பட்டால், அரசு பதிவு பெற்ற மருத்துவரிடம் முதலுதவிப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று பெற்று, நடத்துநர், ஓட்டுநர் உரிமம் பெறவும், அரசுப் பணிகளில் சேரவும் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x