Published : 18 Mar 2021 03:14 AM
Last Updated : 18 Mar 2021 03:14 AM

திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு : வரக்கூடாது என்பதே எங்களது நோக்கம் : விஜயகாந்தை சந்தித்த டிடிவி தினகரன் கருத்து :

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். படம்: பு.க.பிரவீன்

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே எங்களது நோக்கம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இதில், தேமுதிகவுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்குச் சென்று, அங்கு தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். தேர்தல் நிலவரம் குறித்தும், பிரச்சார வியூகங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளன.

பின்னர், டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசினேன். தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே எங்களது நோக்கம். வரும் தேர்தலில் அவர்களை வீழ்த்த வேண்டுமென்பதே எங்களது இலக்கு. ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை அமைத்து தரத்தான் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். தேமுதிகவுக்கு நாங்கள்தான் கூட்டணிக்கு அழைப்பு விடுத்தோம்.

மக்களை ஏமாற்றும் வகையில் திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளன. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பது தமிழக மக்களுக்கே தெரியும். விருத்தாசலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா வெற்றி பெற எங்கள் கூட்டணி உறுதுணையாக இருக்கும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கரோனா போன்ற பாதிப்புகளில் மக்களின் உயிருக்கு ஆபத்து என்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது தேமுதிக துணை செயலாளர் சுதீஷ், பார்த்தசாரதி, அமமுக துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x