Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

தபால் ஓட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் பட்டியலை - மார்ச் 29-க்குள் அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்க உத்தரவு : சட்டப்பிரிவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தபால் ஓட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் பட்டியலை மார்ச் 29-ம் தேதி மாலை 6 மணிக் குள் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும் வழங்கவேண்டுமென்று தொகுதி தேர்தல்அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதற்கான சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதியளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தபால் மூலம் வாக்களிக்க உள்ள மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தகுதியானவர்களின் பட்டியலை தொகுதிவாரியாக வழங்கக் கோரி திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, “மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்காளர் பட்டியலைப் பெற அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் தபால் ஓட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கரோனா பாதிப்புக்கு உள்ளான வாக்காளர்களின் பட்டியலை தனியாக வழங்க உத்தரவிட வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு முன்கூட்டியே இந்த வசதி குறித்து விளக்கி, தேர்தல் நடைமுறைகள் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய முடியும்” என வாதிட்டார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், “தபால் ஓட்டுக்காக அனுமதி கோரி விண்ணப்பித்த வாக்காளர்களின் பட்டியல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட ஒருவாரத்துக்குப் பிறகு பரிசீலிக்கப்பட்டு, மார்ச் 29 அன்று அனைத்து கட்சிகளுக்கும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தபால் ஓட்டுக்காக அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் பட்டியலை தொகுதி வாரியாக மார்ச் 29-ம் தேதிமாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்டதொகுதி தேர்தல் அதிகாரிகள்,அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் வழங்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதற்கிடையே 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலமாக ஓட்டுப்போட அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிதனியாக வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, “மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தபால் மூலமாக வாக்களித்தால், ரகசிய வாக்குப்பதிவு என்பது கேள்விக்குறியாகி விடும். அரசியல் சாசனசட்டப்படி வாக்காளர்கள் அனைவரும் சமமானவர்களே. இதில் எந்த பாரபட்சமும் பார்க்கக்கூடாது. வாக்காளர்கள் யார் என்பது வாக்குச்சாவடிக்கு செல்லும்போது மட்டுமே அடையாளம் காண முடியும். இதுதொடர்பாக எந்தவொரு ஆலோசனையையும் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் முன்கூட்டியே நடத்தவில்லை” என வாதிட் டார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், “இந்த வழக்கு ஊகத்தின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ளது. தற்போது வழங்க உள்ளதபால் வாக்கு என்பது விருப்பத்தேர்வு மட்டுமே” என்றார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரானகூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், “வாக்குச்சாவடிக்கு வர இயலாத இதுபோன்ற வாக்காளர்களுக்கு தபால் ஓட்டுக்குஅனுமதி வழங்க தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுடன் ஆணையம் கலந்து ஆலோசித்துள்ளது” என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x