Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

ரிஷப் பந்த், சுந்தர் விளாசலில் - முன்னிலை பெற்றது இந்தியா :

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த்தின் அதிரடி சதம், வாஷிங்டன் சுந்தரின் அரை சதம் ஆகியவற்றால் இந்திய அணி 89 ரன்கள் முன்னிலை பெற்றது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா8 ரன்களும், சேதேஷ்வர் புஜாரா 15ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

புஜாரா (17), ஜேக் லீக் பந்திலும், விராட் கோலி (0), பென்ஸ்டோக்ஸ் பந்திலும் ஆட்டமிழந்தனர். 41 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்ததால் ரோஹித் சர்மாதடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். அஜிங்க்ய ரஹானே 27 ரன்களில்ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 144 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ரவிச்சந்திரன் அஸ்வின் (13), ஜேக் லீச் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 146 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் ரிஷப் பந்த்துடன் வாஷிங்டன் சுந்தர் இணைந்தார்.

சுந்தர் நிதானமாக விளையாட ரிஷப் பந்த் மட்டையை சுழற்றினார். பென் ஸ்டோக்ஸ் வீசிய 72-வது ஓவரில் ரிஷப் பந்த் 2 பவுண்டரிகளை விரட்ட இந்திய அணி 205 ரன்களை கடந்து முன்னிலை பெற்றது. ஜோ ரூட் வீசிய84-வது ஓவரில் சிக்ஸர் பறக்கவிட்ட ரிஷப் பந்த், தனது 3-வது சதத்தை விளாசினார். முதல் 50 ரன்களை கடக்க 82 பந்துகள் எடுத்துக்கொண்ட ரிஷப் பந்த. அடுத்த 50 ரன்களை 33 ரன்களில் எட்டினார். அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் 118 பந்துகளில், 2 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுதத நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.

89 ரன்கள் முன்னிலை

7-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து ரிஷப் பந்த் 113 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 96 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் தனது 3-வது அரை சதத்தை கடந்தார். நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 94 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 60, அக்சர் படேல் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கடைசி ஷெசனில் மட்டும் இந்திய அணி 32 ஓவர்களில் 142 ரன்களை குவித்திருந்தது.

89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x