Published : 06 Mar 2021 03:13 AM
Last Updated : 06 Mar 2021 03:13 AM

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் திருப்பம் : என்.ஆர்.காங்கிரஸ் தலைமையேற்க திமுக விருப்பம் :

புதுச்சேரியின் நலன் கருதி காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமி தலைமையேற்க வேண்டும் என திமுக விருப்பம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் திமுக அமைப்பாளர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான காரைக்காலைச் சேர்ந்த ஏ.எம்.எச்.நாஜிம் கடந்த3-ம் தேதி முகநூல் நேரலை மூலம் மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அரசியல் கள சூழல் குறித்து பொதுமக்களுடன் விவாதித்த அவர், ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு என்.ரங்கசாமிதலைமையேற்க வேண்டும் என்பது தனதுஆசை என்றும், இதுகுறித்து திமுக தலைமையிடம் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார். இது புதுச்சேரி அரசியல் களத்தில் புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ஏ.எம்.எச்.நாஜிம் நேற்று கூறியது:

மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். புதுச்சேரியின் கலாச்சாரமும், பண்பாடும் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கான முழு பொறுப்பையும் என்.ரங்கசாமி ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தலைமையில் ஆட்சி அமைவதற்கு திமுக- காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்கும் என நம்புகிறேன்.

அடிப்படையில் காங்கிரஸ்காரரான என்.ரங்கசாமி புதுச்சேரி நலனுக்காக, பன்முகத் தன்மையைக் காப்பதற்காக திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு தலைமை ஏற்பதில் எவ்வித சிக்கலும் இருக்க முடியாது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு சென்றேன். அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோருடனும் பேசியுள்ளேன். தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்றும், இதை வரவேற்பதாகவும் நாராயணசாமி தெரிவித்தார். பாஜக கூட்டணியில் இருப்பதை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர்களே விரும்பவில்லை. இனி ரங்கசாமிதான் புதுச்சேரியின் நலன் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்த ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணராவ் அண்மையில் தனது அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததுடன், மீண்டும் ஏனாம் தொகுதியில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்திருந்தார். மேலும், “ஏனாம் தொகுதியில் ரங்கசாமி போட்டியிட வேண்டும். அவரின் வெற்றிக்கு நான் பணியாற்றுவேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, ரங்கசாமியை புதுச்சேரி மக்கள் நீதி மய்ய மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சந்தித்துப் பேசினர். கூட்டணி குறித்து பேசப்பட்டதாக மநீம வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x