Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

சொத்து குவிப்பு புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை கோரிய வழக்கில் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு : 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011-13 காலகட்டத்தில் பதவியைதவறாகப் பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து குவித்துள்ளதாகவும், அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2014-ம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் தாக்கல் செய்த அறிக்கையில், ‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அந்தப் புகாரில் வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை. எனவே,அந்த புகார் முடித்து வைக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக மூத்த வழக்கறிஞர்கள் எல்.சுப்பிரமணியம், அஜ்மல்கான் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் நேற்று மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.

முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி எம்.சத்தியநாராயணன், ‘‘சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய போதிய முகாந்திரம் இருப்பதால் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

அடுத்ததாக தீர்ப்பை வாசித்த நீதிபதி ஆர்.ஹேமலதா, ‘‘அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரானபுகாரில் வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை. மேலும், மனுதாரரின்புகார் தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு, முகாந்திரம் இல்லை என முடிவுக்கு வந்த பிறகுவழக்கு பதிவு செய்து விசாரிப்பது பலனும் தராது. இது இறந்த குதிரைமீது சவாரி செய்வது போலாகும்’’ என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், இந்தவழக்கை 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைப்பது குறித்துமுடிவெடுக்க, வழக்கு ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்பஉத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x