Published : 04 Mar 2021 05:51 AM
Last Updated : 04 Mar 2021 05:51 AM

சுமுக முடிவு எட்டப்படும்: ஜி.கே.வாசன் நம்பிக்கை :

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகாவுடன் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் முதற்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.

இந்த பேச்சுவார்த்தையில் அதிமுக சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணியும் தமாகாவின் துணை செயலாளர்கள் கோவை தங்கம் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர், தமாகா துணை செயலாளர் கோவை தங்கம் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் 12 தொகுதிகளில் தமாகா போட்டியிடுவதற்கான பட்டியல் வழங்கப்பட்டது. 12 தொகுதிகளிலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து முடிவினை தெரிவிப்போம் என அமைச்சர்கள் கூறினர். நல்ல முடிவு நிச்சயம் கிடைக்கும்” என்றார்.

முன்னதாக, சென்னை திநகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற தமாகாவின் இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்களை வழங்கி தனது 2 ஐந்தாண்டு ஆட்சியை அதிமுக அரசு நிறைவு செய்துள்ளது. அதிமுக கூட்டணி மக்கள் மனதில் முதல் வரிசையில் அமரும் கூட்டணியாக இருக்கிறது. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. எத்தனை அணி புதிதாக வந்தாலும் அதிமுக அணி வெல்லும்.

எங்கள் கூட்டணியின் வெற்றியே தமாகாவின் இலக்கு. எனவே, தமாகாவின் இளைஞர் அணி கூட்டணியின் வெற்றிக்கு களப்பணி மேற்கொள்ளும். எதிர்க்கட்சியின் பொய் வாக்குறுதிகள் தோற்றுபோகும். அதிமுகவின் நிஜ வாக்குறுதிகள்தான் வெற்றி பெறப்போகிறது. தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்க சட்டரீதியான முயற்சி நடந்து வருகிறது” என்றார்.

இந்நிலையில், தமாகாவுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.

12 தொகுதிகளில் தமாகா போட்டியிடுவதற்கான பட்டியல் வழங்கப்பட்டது. 12 தொகுதிகளிலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x